உண்மையான 'பப்பு' யார்? - வைரலாகும் திரிணமூல் எம்.பி.யின் பேச்சு!

நாட்டில் உண்மையான பப்பு யார் என்பதை தரவுகளும் புள்ளி விவரங்களும் கூறுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
மஹுவா மொய்த்ரா (கோப்புப்படம்)
மஹுவா மொய்த்ரா (கோப்புப்படம்)

நாட்டில் உண்மையான பப்பு யார் என்பதை தரவுகளும் புள்ளி விவரங்களும் கூறுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் நேற்று மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். 

2022-23 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய மஹுவா, பொருளாதாரம் குறித்து மத்திய அரசு தவறான தகவல்களை அளிப்பதாக குற்றம்சாட்டினார். 

'இந்த அரசு ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் நாட்டின் பொருளாதாரம் உயர்வதாகக் கூறுகிறது, வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றும் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது, எரிவாயு சிலிண்டர்கள், மின்சாரம், வீடுகள் என அனைத்தும் மக்களுக்கு கிடைக்கிறது என்றும் தெரிவிக்கிறது. ஆனால், அடுத்த 8,10 மாதங்களில் உண்மை வெளிப்படுகிறது. இப்போது இந்த டிசம்பரில், பட்ஜெட் மதிப்பீடுகளைவிட கூடுதலாக 3.26 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசு கூறுகிறது. 

அரசும் ஆளும் கட்சியும் 'பப்பு' என்ற சொல்லை உருவாக்கி, அதீத இயலாமையைக் குறிக்க, அந்த சொல்லை பயன்படுத்துகின்றன. ஆனால், உண்மையான பாப்பு யார் என்பதை இப்போது தரவுகளும் புள்ளிவிவரங்களும் கூறுகின்றன' என்றார். 

மேலும், 'அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4 சதவிகிதம் குறைந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தித் துறை 5.6 சதவிகிதம் சரிந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின்படி, 17 தொழில் துறைகள் எதிர்மறை வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. ஒரு வருடத்திற்குள் அந்நியச் செலாவணி கையிருப்பு 72 பில்லியன் டாலர் குறைந்துள்ளது' என்று பட்டியலிட்டார். 

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகமானோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதாகக் குறிப்பிட்ட மஹுவா, இது ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அடையாளமா? ஆரோக்கியமான வரி சூழலின் அடையாளமா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? என்று கேள்வி எழுப்பினார். 

மஹுவா மொய்த்ராவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com