ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாஜகவினர் பிரசாரம் செய்து வரும் நிலையில் நடிகை ஷ்வரா பாஸ்கர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது. ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி பிகினி உடை அணிந்ததாகக் கூறி மத்தியப் பிரதேச பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக தலைவரும், எம்பியுமான பிரக்யாசிங் தாகுர் தெரிவித்த கருத்துக்கு நடிகை ஷ்வரா பாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி பிரக்யா தாக்கூர் மக்களை ஏன் வேலையில்லாமல் அலைக்கழிக்கிறார்? போபால் மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதா? நீங்கள் மிகவும் விசித்திரமானவராக இருக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரக்யா சிங் தாகுர் பதான் படத்தை இந்துக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.