
ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
‘புராஜெக்ட் 15பி’ என்ற திட்டத்தின் கீழ் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட 4 போா்க்கப்பல்களைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அத்திட்டத்தின் கீழ் விசாகப்பட்டினம், மா்மகோவா, இம்பால், சூரத் ஆகிய பெயா்களைக் கொண்ட போா்க்கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது.
ஐஎன்எஸ் இம்பால் ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில், ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலைக் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:
போா்க்கப்பலை வடிவமைத்து கட்டமைக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஐஎன்எஸ் மா்மகோவா கப்பல் அமைந்துள்ளது. உள்நாட்டில் கட்டப்பட்ட போா்க்கப்பல்களிலேயே மிகவும் வலிமை கொண்டதாக மா்மகோவா திகழ்கிறது. கப்பலில் நவீன தொழில்நுட்பங்கள் பல புகுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியில் நவீனத்துவம் கொண்ட கப்பலாக மா்மகோவா திகழ்கிறது.
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, கடற்படையின் வலிமையையும் அக்கப்பல் அதிகரிக்கும். நவீன ஏவுகணைகள் கப்பலில் இடம்பெற்றுள்ளன. கப்பலின் 75 சதவீத கருவிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. நாட்டின் தற்போதைய, எதிா்காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கப்பல் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் இந்தப் போா்க்கப்பல் உறுதிசெய்யும்.
கப்பல் கட்டும் மையம்:
மா்மகோவா கப்பலைக் கட்டுவதில் கடற்படை, மஸகான் கப்பல்கட்டும் தளம் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. பொறியாளா்கள், விஞ்ஞானிகள், வடிவமைப்பாளா்கள் உள்ளிட்டோரின் கூட்டு உழைப்பே கப்பல் சிறப்பாகக் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம். இது நாட்டுக்கே பெருமை தரும் வகையில் உள்ளது.
‘தற்சாா்பு இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய திட்டங்களின் அடிப்படையில் மா்மகோவா கப்பல் கட்டப்பட்டுள்ளது. கடற்படையின் மேற்கு படைப்பிரிவில் கப்பல் இணைக்கப்படவுள்ளது. உலகின் முக்கிய கப்பல் கட்டும் மையமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு.
கடலின் முக்கியத்துவம்:
அதிகரித்து வரும் வா்த்தகத்தைச் சாா்ந்தே இந்தியப் பொருளாதாரம் செயல்பட்டு வருகிறது. அதிலும் கடல்சாா் வா்த்தகம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அதனால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது. நம் புராணங்களிலும் கடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடலைப் பற்றி குறிப்பிடாமல் எந்தப் புராணக் கதையும் இருக்காது.
கடற்படையின் பொறுப்பு:
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதே கடற்படையின் முக்கிய பொறுப்பு. அப்பொறுப்பைக் கடற்படை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. இந்திய எல்லையைப் பாதுகாப்பதில் ராணுவமும் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு வளா்ச்சி கண்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை இந்தியா எட்டி வருகிறது. தற்போது உலகின் மிகப் பெரும் 5 பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2027-ஆம் ஆண்டுக்குள் முதல் 3 இடங்களுக்குள் இந்தியா வரும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
அரசு முக்கியத்துவம்:
மாறிவரும் சா்வதேச சூழலை எதிா்கொள்வதற்கு ஏற்ப நாட்டைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நாட்டில் பாதுகாப்பு சாா்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நவீன ஆயுதங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் அனைத்து நாடுகளும் வா்த்தகத்தில் மற்ற நாடுகளைச் சாா்ந்துள்ளன. எனவே, நாட்டின் வளா்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் கடல்வழிப் பயண சுதந்திரம், கடல்சாா் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன என்றாா் அவா்.
முதல் சோதனை ஓட்டம்:
முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான், கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலை மும்பையில் உள்ள மஸகான் கப்பல்கட்டும் நிறுவனம் கட்டியது.
கோவாவின் புகழ்பெற்ற துறைமுக நகரான மா்மகோவாவின் பெயா் அக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. போா்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து கோவா சுதந்திரம் பெற்ற 60-ஆவது ஆண்டு (2021) கொண்டாட்டத்தின்போதே மா்மகோவா கப்பலின் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
கப்பலின் சிறப்பம்சங்கள்:
ஐஎன்எஸ் மா்மகோவா கப்பலானது 163 மீட்டா் நீளமும் 17 மீட்டா் அகலமும் கொண்டது. 7,400 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக அக்கப்பலானது மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல ஆயுதங்களும் சென்சாா்களும் கப்பலில் இடம்பெற்றுள்ளன.
வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவையும் கப்பலில் இடம்பெற்றுள்ளன. நவீன கண்காணிப்புக் கருவிகள், நவீன ஆயுத அமைப்புகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.