
வேலைவாய்ப்பு விளம்பரம் அல்ல: தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் 63% பணியிடம் காலி
புது தில்லி: மத்திய பெருநிறுவன விவகாரத் துறையின் கீழ் இயங்கும் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் மட்டும் 63 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் அனுமதிபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை 238. இதில் 88 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். 150 இடங்கள் காலியாக உள்ளன என்று பெருநிறுவன விவகாரத் துறை இணை அமைச்சர் இந்தெர்ஜித் சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. காத்திருக்கும் அதிர்ச்சி: போன் பே, கூகுள் பே பயனாளர்களுக்கு விரைவில் கட்டுப்பாடு
மேலும், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் நடந்த 92 வழக்குகள் இந்த விசாரணை அமைப்பின் கீழ் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் கீழ் விசாரணைக்கு வரும் ஒவ்வொரு வழக்கும், மிக சிக்கலான மோசடியுடன் மிக அழமான விசாரணை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்களை திரட்டி, பல்வேறு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி விவரங்களைப் பெற்று தொகுத்து அவற்றின் மூலம் வழக்குகளில் தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம். அதேவேளையில், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் வழக்குகளை முடிக்கவும் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 238 ஊழியர்களுடன், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூடுதலாக 105 பேரை பணியமர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.