
நடிகர் ஷாருக்கான் தனது மகளுடன் பதான் படத்தைப் பார்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில உள் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவைத் தொடர்ந்து, 'பதான்' பாடலில் காவி நிற உடை அணிந்தது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவரும் கேள்வி எழுப்பியுள்ளார்.
'பதான்' படத்தின் ''பேஷாரம் ராங்..'' எனும் பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் கிரிஷ் கெளதம், ஷாருக்கான் தனது மகளுடன் பதான் படத்தைப் பார்க்க வேண்டும். திரையரங்க புகைப்படத்தைப் பதிவிட்டு தனது மகளுடன் படம் பார்த்ததை ஷாருக்கான் உலகத்திற்கு சொல்ல வேண்டும்.
இது கட்டாயம் ஏற்கத் தக்கதல்ல. எதை நினைத்தாலும் படமாக எடுப்பீர்களா? எனில், வெளிப்படையாக ஒன்று கேட்கிறேன். முகமது நபிகள் இதுபோன்று படம் எடுத்து கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவீர்களா? அப்படி வெளியிட்டால் உலகம் முழுக்க ரத்த வெள்ளம் பாயும் எனக் குறிப்பிட்டார்.
மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மாநில தலைவருமான கோவிந்த் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செளரி ஆகியோரும் பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரானதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பதான் திரைப்படம் பற்றியதல்ல, அதில் அணிந்துவரும் ஆடைகள் பற்றியது. பொதுவெளியில் இந்தியப் பெண் இவ்வாறு உடை அணிந்து மற்றவர்கள் முன்பு நிற்பதை எந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் ஏற்கமுடியாது என சுரேஷ் பச்செளரி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.