ரயில்களை எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. வேலைவாய்ப்பு மோசடியின் பகீர் பின்னணி

தில்லியின் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வந்து சென்ற ரயில்களை எண்ணும்பணியை இளைஞர்களைக் கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
ரயில்களை எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. வேலைவாய்ப்பு மோசடியின் பகீர் பின்னணி
ரயில்களை எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. வேலைவாய்ப்பு மோசடியின் பகீர் பின்னணி


புது தில்லி: ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கும்பல், தில்லியின் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வந்து சென்ற ரயில்கள் மற்றும் அதன் பெட்டிகளை எண்ணி குறிப்பெடுக்கும் பணியை இளைஞர்களைக் கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

ரூ.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை ரயில்வே வேலைக்காகக் கொடுத்துவிட்டு, தாங்கள் ஏமாந்தது கூட தெரியாமல், ரயில் நிலையங்களில் பகல், இரவு என இரண்டு வேளையும் நாள்தோறும் தலா 8 மணி நேரம் ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டு எத்தனை ரயில்கள் வந்து செல்கின்றன என்பதை மாதக்கணக்கில் எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்களைப் பற்றிய தகவல் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து குறைந்தது 28 பேர் புது தில்லி ரயில் நிலையத்தின் வெவ்வேறு நடைமேடைகளில் ஒரு மாதத்திற்கு எட்டு மணிநேரம், ரயில்கள் மற்றும் அவற்றின் பெட்டிகளின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றைக் கணக்கிட பணியமர்த்தப்பட்டு, மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலைவாய்ப்பில் மோசடிக்கு ஆளானவர்கள் என்று கூட அறியாமல், ஒவ்வொரு நாளும் நடைமேடைகளில் ஏராளமான இளைஞர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளனர்.

பயணச்சீட்டு பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர்கள் மற்றும் எழுத்தர் பதவிகளுக்கான பயிற்சியின் ஒரு பகுதி இது என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் 2 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாய் வரையில் ரயில்வேயில் வேலை பெறுவதற்காகச் செலுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வேலைக்கு ஜூன் மற்றும் ஜூலை வரை ஒரு மாத பயிற்சி என்று சொல்லி மோசடியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.2.67 கோடியை ஏமாற்றியிருப்பதும், 78 வயதான முன்னாள் ராணுவ வீரர் எம்.சுப்புசாமி அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோசடியாளர்கள் என்று தெரியாமல், தான் ஏமாந்துவிட்டதாகக் கூறும் எம். சுப்புசாமி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மோசடி கும்பலிடம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் இது முழுக்க முழுக்க மோசடி என்பது தனக்குத் தெரியாது என்றும், தானும் அவர்களின் வலையில் விழுந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் பெரும்பாலும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் பட்டம்பெற்றவர்களாக உள்ளனர்.  இது பற்றி மதுரையைச் சேர்ந்த செந்தில் குமார் கூறுகையில், ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வகையான பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்கள் மோசடியாளர்கள். ஆனால், டிக்கெட் பரிசோதகர்கள், போக்குவரத்து உதவியாளர்கள், உதவியாளர்கள் என பல்வேறு வேலைகளில் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அனைவருமே ரயில் நிலையத்தில் அமர்ந்து நாள்தோறும் தலா 8 மணி நேரம், இரவு மற்றும் பகல் என  எத்தனை ரயில்கள் வந்து செல்கின்றன என்று எண்ணி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தோம் என்கிறார்.

அனைத்து இளைஞர்களுக்கும் வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகள் போலியானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இதுபோன்ற மோசடியாளர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று ரயில்வே பல முறை எச்சரிக்கை செய்திகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ரயில்வே பணிகள் அனைத்தும் தேர்வுகள் மூலம்தான் நிரப்பப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com