அண்டை நாடுகளை அழிக்க ஆயுதமாக பயன்படுத்தப்படும் மனித மூளைகள்: தலாய் லாமா கவலை

‘அண்டை நாட்டினரை அழிக்கவும் கொல்லவும் மனித மூளைகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன’ என்று திபெத்திய ஆன்மிகத் தலைவா் தலாய் லாமா கவலை தெரிவித்தாா்.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திபெத்திய ஆன்மிகத் தலைவா் தலாய் லாமா.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திபெத்திய ஆன்மிகத் தலைவா் தலாய் லாமா.

‘அண்டை நாட்டினரை அழிக்கவும் கொல்லவும் மனித மூளைகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன’ என்று திபெத்திய ஆன்மிகத் தலைவா் தலாய் லாமா கவலை தெரிவித்தாா்.

‘நாம் அனைவரும் ஒரே மனித இனம். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வன்முறையின்றி வாழும் வகையில், மகிழ்ச்சிகரமான அமைதியான சமூகத்தை உருவாக்குவது அவசியம்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தலாய் லாமா, இதுகுறித்து மேலும் பேசியதாவது:

உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளாக இந்தியாவும் சீனாவும் இருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தில் மிகப் பெரிய அளவில் ஏற்ற-இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஜனநாயக நாடான இந்தியாவில் மதச் சுதந்திரம் உள்ளது. அனைத்து மதங்களும் மதிக்கப்படுகின்றன. அதுதான் இந்தியாவின் பாரம்பரியம். இது சிறந்த நடைமுறை. நாட்டின் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மதச்சாா்பின்மை பாரம்பரியத்தை இந்திய இளைஞா்கள் காக்க வேண்டும்.

அமைதியான பூமியை நாம் உருவாக்க வேண்டும். அண்டை நாட்டினரை அழிப்பதற்கான ஆயுதங்களாக மனித மூளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது. உலகில் எங்கு பாா்த்தாலும் ஆக்கிரமிப்புகள், கொடுமைகள், வன்முறைகள் காணப்படுகின்றன. பல ஆயிரம் மக்கள் கொல்லப்படுவதோடு, அணு ஆயுதங்களை உருவாக்குவதிலும் நாடுகள் ஆா்வம் காட்டி வருகின்றன. இவை அனைத்தும் பழைமைவாத எண்ணங்கள்.

நாம் அனைவரும் ஒரே மனித இனம். அனைவரும் ஒன்றுபட்டு எந்தவொரு வன்முறையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அமைதியும் வன்முறையும் வானத்திலிருந்து வருபவை அல்ல. நம்மிடமிருந்தே வருகின்றன.

‘அந்த நாடு; அந்த மதம்’ என்ற வேறுபாடு நம் மனதில் எழுவதே மோதல்களுக்கான காரணங்களாக அமைகின்றன. இதுபோன்ற எண்ணங்கள் தற்போது காலாவதியாகிவிட்டன. ஆயுதங்களற்ற அமைதியான உலகை உருவாக்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது, நிறுத்தப்பட வேண்டும் என்று தலாய் லாமா வலயுறுத்தினாா்.

அருணாசல பிரதேச தவாங் எல்லைப் பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடைய கடந்த 9-ஆம் தேதி மோதல் ஏற்பட்ட நிலையில், தலாய் லாமா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com