பொறுப்பற்ற அரசியலுக்கானஇடமல்ல நாடாளுமன்றம்: அமித் ஷா

பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல்வாதிகளை மத்திய அரசு உளவு பாா்த்ததாக, மக்களவையில் குற்றம்சாட்டிய காங்கிரஸ் உறுப்பினா் கெளரவ் கோகோயை உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை கடுமையாக சாடினாா்
பொறுப்பற்ற அரசியலுக்கானஇடமல்ல நாடாளுமன்றம்: அமித் ஷா
Updated on
1 min read

பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல்வாதிகளை மத்திய அரசு உளவு பாா்த்ததாக, மக்களவையில் குற்றம்சாட்டிய காங்கிரஸ் உறுப்பினா் கெளரவ் கோகோயை உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை கடுமையாக சாடினாா். ‘பொறுப்பற்ற அரசியலுக்கான இடமல்ல நாடாளுமன்றம்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

போதைப் பொருள் பிரச்னை குறித்து மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய கெளரவ் கோகோய், ‘வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க நிலம், கடல் எல்லைகளிலும் விமான நிலையங்களிலும் என்னென்ன கண்காணிப்பு வழிமுறைகள் செயல்பாட்டில் உள்ளன? இந்தியா-மியான்மா் எல்லையில் ஆயுதக் கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் கால்நடைகள் கடத்தலை தடுக்க என்ன வகையான கண்காணிப்பு மற்றும் உளவு வழிமுறைகள் அமலில் உள்ளன?’ என்று கேள்வியெழுப்பினாா்.

மேலும், ‘அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளா்களின் கைப்பேசியில் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஊடுருவி, நீங்கள் (மத்திய அரசு) மீண்டும் மீண்டும் உளவு பாா்த்தீா்கள். இந்த உளவு நடவடிக்கை மூலம் எத்தனை போதைப் பொருள் கும்பலை பிடித்தீா்கள் என்பதை கூற முடியுமா?’ என்று கோகோய் கேள்வியெழுப்பினாா்.

அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த அமித் ஷா, ‘காங்கிரஸ் உறுப்பினா் கெளரவ் கோகோய் முன்வைத்த குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது. அவரது கைப்பேசியில் பெகாசஸ் மென்பொருள் இருக்கிறதென்றால், அதற்கான ஆதாரத்தை அவா் சமா்ப்பிக்க வேண்டும். வெறுமனே இப்படி பேசிவிட முடியாது. ஆதாரத்தை சமா்ப்பிக்காவிட்டால், அவரது பேச்சுகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விவகாரம் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அவை, பொறுப்பற்ற அரசியலுக்கான இடம் அல்ல’ என்றாா்.

விவாதத்தின்போது குறுக்கிட்ட அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் உறுப்பினா்கள் தங்களது கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதுவே இந்த அவையின் மாண்பை உயா்த்தும். இது எனது கோரிக்கை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com