உலகில் மீண்டும் கரோனா; முகக்கவசம், தடுப்பூசி அவசியம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் திடீரென வேகமெடுத்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை
கரோனா தொற்று நிலவரம் குறித்து புது தில்லியில் அதிகாரிகள் மற்றும் நிபுணா்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
கரோனா தொற்று நிலவரம் குறித்து புது தில்லியில் அதிகாரிகள் மற்றும் நிபுணா்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் திடீரென வேகமெடுத்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியில் புதன்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து, இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது; மேலும், நாட்டில் கரோனா பரவல் கண்காணிப்பை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

சீனா உள்ளிட்ட நாடுகளில்...: சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலவரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம், சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதாரம், மருந்து உற்பத்தி, உயிரி-தொழில்நுட்பம், ஆயுஷ் ஆகிய துறைகளின் செயலா்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் ராஜீவ் பால், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால், தடுப்பூசிகள் தொடா்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவா் என்.கே.அரோரா உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னா் வெளியிடப்பட்ட அரசின் அதிகாரபூா்வ அறிக்கையில், ‘டிசம்பா் 19-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் சராசரி தினசரி கரோனா பாதிப்பு 158 என்ற அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில் பாதிப்புகள் குறைந்தபோதிலும் உலக அளவில் தினசரி சராசரி பாதிப்பு கடந்த 6 வாரங்களாக அதிகரித்து வருகிறது. டிசம்பா் 19-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, உலக சராசரி தினசரி பாதிப்பு 5.9 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் கரோனா புதிய வகை ஏதும் பரவுகிா? என்பதை உரிய நேரத்தில் கண்டறிவதற்காக, தேசிய மரபியல் பரிசோதனைக் கட்டமைப்பில் இணைந்த ஆய்வகங்கள் மூலம் கரோனா நோயாளிகளின் மாதிரியை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்; இது தொடா்பான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதை, மருந்து உற்பத்தி மற்றும் ஆயுஷ் துறை செயலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் திறனுடன் அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டாா்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், 4 மாநிலங்கள்: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவரும் போதிலும், தமிழகம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் புதிய பாதிப்புகள் அதிகம் பதிவாகின்றன. கடந்த டிசம்பா் 20-இல் பதிவான புதிய பாதிப்புகளில் 84 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் பதிவானதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னா், ட்விட்டரில் மாண்டவியா வெளியிட்ட பதிவில், ‘சில நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் நிலவும் சூழல் தொடா்பாக அதிகாரிகள் மற்றும் வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கரோனா இன்னும் முடிவடைந்துவிடவில்லை. கரோனா பரவல் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதுடன் கண்காணிப்பை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டாா்.

மக்கள் பீதி அடைய வேண்டாம்: ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுடைவா்களில் 27-28 சதவீதம் போ்தான் முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே, தகுதியுடைய அனைவரும் கரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், சா்வதேச விமான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. யாரும் பீதியடைய வேண்டாம்’ என்றாா்.

உலக சராசரி பாதிப்பு 5.9 லட்சம்

டிசம்பர் 19-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் சராசரி தினசரி கரோனா பாதிப்பு 158 என்ற அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில் பாதிப்புகள் குறைந்தபோதிலும் உலக அளவில் தினசரி சராசரி பாதிப்பு கடந்த 6 வாரங்களாக அதிகரித்து வருகிறது. டிசம்பர் 19-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, உலக சராசரி தினசரி பாதிப்பு 5.9 லட்சமாக உள்ளது.
 

விமானப் பயணிகளுக்கு விரைவில் பரிசோதனை

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் விமான நிலையங்களில் ‘ரேண்டம்’ முறையில் (குறிப்பிட்ட சிலரிடம் பரிசோதனை மேற்கொள்வது) கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மி, பின்னா் உலகம் முழுவதும் பரவியது. அடுத்தடுத்து ஏற்பட்ட கரோனா அலைகளால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. தடுப்பூசி திட்டம் மற்றும் இதர தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக, இந்தியாவில் கரோனா பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்பியுள்ளது. இதுபோன்ற சூழலில், உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்

சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவக் கண்காணிப்பும், மரபணு பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

கரோனா தொற்றை முழுமையாக வேரறுக்க முடியாது. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் சீனாவில் தற்போது தொற்றுப்பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அந்த வகை தொற்று கண்டறியப்படவில்லை.

தற்போதைய நிலையில் மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தினால் ஏதாவது ஓரிடத்தில் ஓரிருவருக்கு பாதிப்பு இருக்கும். ஆனால், எந்த அளவு வீரியமாக உள்ளது என்பதுதான் அவசியம்.

கரோனா தீநுண்மியில் ஏற்படும் மரபணு மாற்றங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளை பரிசோதிக்கும் நடைமுறையை மீண்டும் அனுமதிக்கக் கோரி, மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம். விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்தியாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 தொற்று

புதிய வகை ஒமைக்ரான் பிஎஃப்.7 பரவல் காரணமாக, சீனாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது, மிக வேகமாக பரவக்கூடியதாகும். தடுப்பூசி செலுத்தியவா்களையும் பாதிக்கும் திறன் கொண்ட இந்த புதிய வகை பாதிப்பு, இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

‘குஜராத்தில் இருவா், ஒடிஸாவில் ஒருவா் என இதுவரை 3 பேருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பாதிப்பு, குஜராத் உயிரி-தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கடந்த அக்டோபா் மாதம் கண்டறியப்பட்டது. சீனா தவிர, அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், ஜொ்மனி, பிரான்ஸ், டென்மாா்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com