இந்திய-சீன எல்லைப் பிரச்னை: அவையில் விவாதிப்பது சரியல்ல

"அரசியல் ரீதியில் உணர்வுபூர்வ விஷயமான இந்திய- சீன எல்லைப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது சரியல்ல' என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்திய-சீன எல்லைப் பிரச்னை: அவையில் விவாதிப்பது சரியல்ல

"அரசியல் ரீதியில் உணர்வுபூர்வ விஷயமான இந்திய- சீன எல்லைப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது சரியல்ல' என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 கடந்த காலத்தில் இதே கோரிக்கையை அவையில் எழுப்ப தான் முயன்றபோது அப்போதைய காங்கிரஸ் அரசு அதை ஏற்க மறுத்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
 இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
 இந்திய- சீன எல்லைப் பிரச்னை உணர்வுபூர்வமானது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது. கடந்த 2005-இல் இதே பிரச்னை தொடர்பாக அவையில் நான் விவாதிக்க முயன்றதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
 அப்போது அவையின் தலைவராக இருந்த மறைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் என்னை அழைத்து, "இந்திய- சீன எல்லைப் பிரச்னை உணர்வுபூர்வமானது என்றும், எனவே அதை அவையில் விவாதிக்க வேண்டியதில்லை. நமக்குள் விவாதித்துக் கொள்வோம்' என்றும் தெரிவித்தனர்.
 அதுபோல 2008-இல் சீன அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது எல்லைப் பிரச்னை தொடர்பாக அவையில் விவாதிக்குமாறு பாஜக மறுபடியும் ஒருதடவை அவையில் கோரிக்கை விடுத்தது. அப்போது பிரணாப் முகர்ஜி, "இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டாம், அரசு இதை உள்ளுக்குள் விவாதிக்கும். தனிப்பட்ட முறையில் இதற்கு தீர்வு காணப்படுமே தவிர அவை மூலமாக அல்ல' என்று பதில் அளித்தார்.
 இது உணர்வுபூர்வ பிரச்னையாக இருப்பதால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எல்.கே.அத்வானியும் இதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதே காங்கிரஸ் கட்சி தற்போது அவையில் இதுபற்றி விவாதிக்கக் கோரி வருகிறது.
 தேசத்துக்கு நல்லது எது என்பதை அக்கட்சி சிந்திக்க வேண்டும். அதை விடுத்து பிரச்னையைத் தொடர்ந்து அவையில் எழுப்புவது நல்லதல்ல. இது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும்.
 2013-இல் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஏ.கே.அந்தோனி இருந்தபோது, "எல்லை பகுதிகளை மேம்படுத்தாமல் இருக்கவும், அங்கு உள்கட்டமைப்பு ஏற்படுத்தாமல் இருக்கவும் காங்கிரஸ் கொள்கை அளவில் முடிவு எடுத்திருப்பதாக' அவையில் தெரிவித்தார்.
 காங்கிரஸின் இக்கொள்கை முடிவு தவறானதாகும். இதனால் படைகளின் இயக்கம் தடைபட்டதோடு எல்லைப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது காங்கிரஸ் தனது வரலாறை மறந்துவிட்டது என்றார்.
 இந்திய }சீன வீரர்களுக்கு இடையே கடந்த 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கடந்த டிச. 9 ஆம் தேதி இருதரப்பு வீரர்களும் அருணாசலம் பிரதேச மாநிலம், தவாங் பிரிவு, யாங்ட்ஸி பகுதியில் மீண்டும் மோதிக் கொண்டனர்.
 இதுதொடர்பாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.
 டிச. 7-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் வரும் வெள்ளிக்கிழமையுடன் கூட்டத் தொடர் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com