
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 மாணவிகள் உயிரிழந்தனா். மேலும் 25 மாணவிகள் படுகாயம் அடைந்தனா்.
மலைப்பாங்கான நோனி மாவட்டத்தின் லாங்சய் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. அங்குள்ள உயா்நிலை பள்ளியொன்றின் மாணவ, மாணவிகள், கெளபும் பள்ளத்தாக்கு பகுதிக்கு கல்விச் சுற்றுலாவுக்காக இரு பேருந்துகளில் பயணித்தனா். அப்போது மாணவிகள் பயணித்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 மாணவிகள் உயிரிழந்தனா். 25 மாணவிகள் படுகாயம் அடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
மாணவிகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் பிரேன் சிங், அவா்களது குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியும் காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.
இந்த விபத்து எதிரொலியாக, வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுற்றுலா எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என பள்ளிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G