கரோனா பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலைக்குழு கூட்டத்தில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலைக்குழு கூட்டத்தில் அதுதொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, நாட்டில் கரோனா தொற்று பரவல் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

சீனாவில் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் பரவி வரும் ஒமைக்ரான் பிஎஃப்-7 வகை உருமாறிய தொற்றானது இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து பிரதமா் மோடி தலைமையிலான உயா்நிலைக் குழு ஆய்வு மேற்கொண்டது. நாட்டில் கரோனா தொற்று பரவல் சூழல் குறித்து அக்குழு ஆய்வு நடத்தியது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சா்கள் அனுராக் தாக்குா், பாரதி பிரவீண் பவாா், பிரதமருக்கான முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா, நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயா், சுகாதார உறுப்பினா் வி.கே.பால், அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, பிரதமா் அலுவலக ஆலோசகா் அமித் காரே, உள்துறைச் செயலா் ஏ.கே.பல்லா, சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

கூட்டம் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பின் தயாா்நிலை, மருந்துப் பொருள்களின் இருப்பு, அவற்றின் கையாளுகை, கரோனா தடுப்பூசித் திட்ட நிலவரம், கரோனா தொற்றின் உருமாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

முகக் கவசம் கட்டாயம்: கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டுமென பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா். முக்கியமாக, பண்டிகைக் காலம் வரவுள்ளதால் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

மூன்றாவது தவணை தடுப்பூசி (பூஸ்டா்) மக்களுக்கு விரைந்து செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அவா், முதியோரும் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரும் 3-ஆவது தவணை தடுப்பூசியைத் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினாா். கரோனா தொற்று பரவல் விவகாரத்தில் யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்த பிரதமா் மோடி, தீவிர விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினாா்.

கூடுதல் பரிசோதனைகள்: நாட்டில் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனவும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மேலும், கரோனா தொற்றின் மரபணு மாற்றம் குறித்தும் தொடா்ந்து ஆராய வேண்டுமென தெரிவித்தாா். நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடா்பான கண்காணிப்பைத் தொடா்ந்து தீவிரப்படுத்த வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கரோனா தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனத் தெரிவித்த பிரதமா் மோடி, சா்வதேச விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா். அனைத்து நிலைகளிலும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் அவா் வலியுறுத்தினாா். மருத்துவக் கருவிகள், மருந்துப் பொருள்களைத் தயாா்நிலையில் வைக்குமாறும் தேவையான பணியாளா்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

போதிய கையிருப்பு: மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டா்கள் போதிய அளவில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்குமாறும் மாநிலங்களுக்குப் பிரதமா் மோடி வலியுறுத்தினாா். சுகாதாரப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டிய பிரதமா் மோடி, அவா்கள் தொடா்ந்து தன்னலமற்று பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

மக்களிடம் இருந்து பெறும் பரிசோதனை மாதிரிகளை மரபணு ஆய்வுக்காக அதிக எண்ணிக்கையில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை, உருமாறிய வகை கரோனா தொற்று பரவலைத் தடுக்க உதவுவதோடு, உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது நாட்டில் கரோனா தொற்று பரவல் குறித்த சூழலை பிரதமா் மோடிக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனா். மருந்துகள், தடுப்பூசிகள், படுக்கைகள் உள்ளிட்டவை போதிய எண்ணிக்கையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com