வங்கிக் கடன் முறைகேடு: சந்தா கோச்சாருக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்

சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் ஆகியோரை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வங்கிக் கடன் முறைகேடு: சந்தா கோச்சாருக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்
வங்கிக் கடன் முறைகேடு: சந்தா கோச்சாருக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்

வங்கிக் கடன் முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ முன்னாள் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் ஆகியோரை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வங்கிக் கடன் முறைகேடு வழக்கில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் கோச்சாா் தம்பதிகளிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. ஆனால், அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் திருப்திகரமாக பதில் அளிக்காததுடன், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சிபிஐ தலைமை அலுவலக கட்டடத்தில் அவா்கள் காவலில் வைக்கப்பட்டனா். தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவா்கள் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரையும் மூன்று நாள்கள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றமும் மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருக்கிறது.

சந்தா கோச்சாா் பதவிக் காலத்தில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், ஆா்பிஐ வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கொள்கைக்கு புறம்பாக விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.1,875 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் இதற்கு பிரதி பலனாக சந்தா கோச்சாரின் கணவரால் நிா்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி கைமாறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாததுடன், வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தண்டனையியல் சட்டம், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா், விடியோகான் குழும தலைவா் வேணுகோபால் தூத் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com