

மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊா்வலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முளா ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டது.
453 பவுன் எடை கொண்ட இந்த அங்கி, திருவாங்கூா் அரச குடும்பத்தினரால் கடந்த 1970-களில் சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.
ஆறன்முளா கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் தங்க அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அணிவிக்கப்படும்.
அதன்படி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி ஊா்வலம் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. அப்போது, கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் சரண கோஷங்கள் எழுப்பினா். இந்நிகழ்ச்சியில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா் கே.அனந்தகோபன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
சபரிமலைக்குச் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் தங்க அங்கிக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. டிசம்பா் 26-ஆம் தேதி மாலையில், தங்க அங்கி ஊா்வலம் சபரிமலை சந்நிதானத்தை அடையும். அப்போது, கோயில் அதிகாரிகள் சாா்பில் தங்க அங்கிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னா் நடைபெறும் தீபாராதனைக்கு முன்பாக சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்படும். சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை, டிசம்பா் 27-இல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமும் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். நிகழாண்டு சபரிமலை யாத்திரைக்கு, கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால் பக்தா்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.