ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிம்லாவில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஜெய்ராம் தாக்குர் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தைத் தொடர்ந்து ஜெய்ராம் தாக்குர், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுவது எங்களின் முதன்மைப் பொறுப்பு. பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய அனைத்து பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.
உங்கள் அனைவரின் ஆதரவுடனும் பாசத்துடனும் இந்தப் பொறுப்பை முன்னின்று நிறைவேற்றுவேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இம்மாநிலத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.