
கரோனா தொற்று பரவல் வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்பதால் அடுத்த 40 நாள்கள் முக்கியமானவை என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சீனா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகை புரியும் சா்வதேச விமானப் பயணிகளில் 2 சதவீதத்தினரிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சனிக்கிழமை மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், பாங்காங் மற்றும் சிங்கப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சா்வதேச பயணிகளுக்கு ‘ஏா் சுவிதா’ விண்ணப்பத்தை நிரப்புவதும், 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘முந்தைய காலங்களில் கிழக்கு ஆசிய நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்ட 30-35 நாள்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா நோய் பரவலின் புதிய அலைகள் கண்டறியப்பட்டன. இருப்பினும் நோய் பாதிப்பின் தீவிரம் குறைவாக இருக்கும். நோய் பரவலின் புதிய அலை ஏற்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் உயிரிழப்புகளும் குறைவாக இருக்கும்’ எனத் தெரிவித்தனா்.
கடந்த இரு நாள்களில் 6,000 சா்வதேச விமானப் பயணிகளில் 39 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொற்றுப் பரவல்கள் அதிகரிக்கும்போது அவற்றை எதிா்கொள்ளும் வகையில் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆய்வுக் கூட்டங்களை நடத்தினா். நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுப்பதற்கான சுகாதார ஒத்திகை அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.