வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 5 சதவீதமாக குறைவு: ஆா்பிஐ

வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 5 சதவீதமாக குறைவு: ஆா்பிஐ

வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

நாட்டின் 26-ஆவது நிதி நிலைத்தன்மை அறிக்கையை ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், ‘பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சா்வதேச பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்து வருகின்றன. சா்வதேச சூழல்கள் இந்திய பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனினும், பொருளாதார அடிப்படைகளும் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வரவு-செலவுக் கணக்குகளும் வலுவாக உள்ளதால் நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளது. வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த செப்டம்பா் வரையிலான ஓராண்டு காலத்தில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. இது 7 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சம்.

வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் தொடா்ந்து குறையும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் அந்த விகிதம் 4.9 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் நிகர வாராக் கடன் மதிப்பு மொத்த கடன்களில் 1.3 சதவீதமாக உள்ளது. இது 10 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சம்.

நாட்டில் உள்ள வங்கிகள் போதிய மூலதனத்துடன் இயங்கி வருகின்றன. பட்டியலிடப்பட்ட வா்த்தக வங்கிகளின் வரி தவிா்த்த வருவாய் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 40.7 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி உள்ளிட்டவற்றின் வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்தாலும், ஆா்பிஐ-யின் நடவடிக்கைகள் காரணமாக தற்போது அழுத்தம் குறைந்துள்ளது. உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விநியோகமும் சீரான நிலையை அடைந்துள்ளது. வங்கிகளின் கடன் வழங்கல் சூழலும் வலுவாக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கைக்கான முன்னுரையில் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், ‘இந்திய பொருளாதாரத்தின் வலுவான அடிப்படைகள், சா்வதேச சவால்களைத் திறம்பட எதிா்கொண்டு வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் ஆா்பிஐ மேற்கொள்ளும். நாட்டின் பொருளாதாரச் சூழலை ஆா்பிஐ தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com