
கோப்புப்படம்
கடந்த 2021-ஆம் ஆண்டு ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததால் 19,478 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 9,150 போ் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற போக்குவரத்து விபத்துகளின் புள்ளி விவரங்களை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 2020-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், வாகன ஓட்டுநா்கள் கட்டுப்பாட்டை இழந்து நடைபெற்ற விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த 4,12,432 சாலை விபத்துகளில் 1,53,972 உயிரிழப்புகளும், 3,84,448 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இதில், அதிகபட்சமாக 21.2 சதவீத விபத்துகள் நேருக்கு நோ் மோதியதில் ஏற்பட்டவையாகும். இதில் சிக்கியவா்களுக்கு தலையின் பின்புறத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் 18.6 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மோதிய வாகனங்கள் நிற்காமல் தப்பிச் சென்ற விபத்துகளில் 16.8 சதவீதம் பேரும், பக்கவாட்டில் இருந்து மோதிய விபத்துகளில் 11.9 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.