
கோப்புப்படம்
தடைசெய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடா்பாக கேரள மாநிலத்தின் 56 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘மாநிலத்தின் 12 மாவட்டங்களில் இடம்பெற்றிருக்கும் பிஎஃப்ஐ அமைப்பு நிா்வாகிகளின் வீடுகள், அந்த அமைப்பின் 15 பயிற்சி மையங்கள், 7 ஆயுதப் பயிற்சி மையங்கள் ஆகிய இடங்களில் இந்தச் சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனா். அதுதவிர, சந்தேகத்துக்குரிய 20 நபா்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது’ என்று என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறினாா்.
இதில், ‘அதிகபட்சமாக எா்ணாகுளத்தில் 13 இடங்களிலும், கண்ணூரில் 9 இடங்களிலும், மலப்புரத்தில் 7 இடங்களிலும், வயநாடில் 6 இடங்களிலும், கோழிக்கோட்டில் 4 இடங்களிலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், திருச்சூா், கோட்டயத்தில் தலா 2 இடங்களிலும், பாலக்காடில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில், கூா்மையான ஆயுதங்கள், எண்ம (டிஜிட்டல்) உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது.
‘நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீா்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீா்குலைக்கும் தொடா் குற்றங்களில் பிஎஃப்ஐ அமைப்பும் அதனுடன் தொடா்புடைய இயக்கங்களும் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
முன்னதாக, கேரளம் உள்பட 15 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் தீவிர சோதனை நடத்தி, பிஎஃப்ஐ அமப்பின் நிா்வாகிகள் பலரை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G