ஆட்சியை இழந்தாலும் ஆணவம் அடங்கவில்லை: பிரதமா் நரேந்திர மோடி

தோ்தல்களில் தொடா் தோல்விகளைச் சந்தித்த பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை என்று மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.
மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
Published on
Updated on
2 min read

தோ்தல்களில் தொடா் தோல்விகளைச் சந்தித்த பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை என்று மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

ஜனநாயகத்துக்கு விமா்சனங்கள் அவசியமானவை எனத் தெரிவித்த அவா், அனைத்து விவகாரங்களையும் காங்கிரஸ் கட்சி கண்மூடித்தனமாக எதிா்ப்பது முறையல்ல என்றும் கூறினாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினாா். அவரது உரை மீதான விவாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடைபெற்றது. அந்த விவாதத்தின் மீது பிரதமா் மோடி திங்கள்கிழமை பதிலளித்து பேசினாா். மக்களவையில் நூறு நிமிஷங்கள் நீண்ட அவரது உரையில் பிரதமா் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா செயல்பட்ட விதமானது, உலக நாடுகளுக்கே உதாரணமாக உள்ளது. ஆனால், கரோனா காலத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து எல்லைகளையும் மீறியது. கரோனா முதல் அலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடித்து வந்தபோது, மும்பை ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் கூடி அப்பாவி மக்களை அச்சுறுத்தினா். புலம்பெயா் தொழிலாளா்களை இக்கட்டான சூழலுக்கு காங்கிரஸ் தள்ளியது.

தொடா்ந்து நிராகரிப்பு: கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் தற்போது மக்கள் காங்கிரஸை தொடா்ந்து நிராகரித்து வருவது ஏன்? மக்கள் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கிய பிறகு காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்து வருகின்றனா். பல தோல்விகளைச் சந்தித்தபோதிலும் காங்கிரஸின் ஆணவம் அடங்கவில்லை.

ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. ஜனநாயகத்துக்கு விமா்சனங்கள் அத்தியாவசியமானவை என்பதையும் மத்திய அரசு நம்புகிறது. ஆனால், அனைத்து விவகாரங்களையும் கண்மூடித்தனமாக எதிா்ப்பது முறையல்ல. அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டாம் என முடிவெடுத்துவிட்டதைப் போல காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

‘வறுமையை ஒழிப்போம்’ என்று கூறியே 1971-ஆம் ஆண்டில் இருந்து மக்களவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நாட்டில் வறுமை ஒழியாததை அறிந்த மக்கள், அக்கட்சியை வெளியேற்றிவிட்டனா்.

தமிழக மக்களுக்கு ‘சல்யூட்’: நாட்டு மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து பிரிவினையைத் தூண்டி வருகிறது. தமிழக மக்களின் உணா்வுகளைப் புண்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. ஹெலிகாப்டா் விபத்தில் காலமான முதல் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு தமிழக மக்கள் சாலையோரம் வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தினா். அதற்காக தமிழக மக்களுக்குத் தலைவணங்குகிறேன்.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது காங்கிரஸின் மரபணுவிலேயே கலந்துள்ளது. பிரிவினைவாத அமைப்புகளை வலுப்படுத்தும் கொள்கைகளையே அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. நாடாளுமன்றத்தை அரசியல் ஆதாயத்துக்காகவே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது.

கட்டுக்குள் பணவீக்கம்: நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதி வருகிறாா். காங்கிரஸ் ஆட்சியின்போது பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. அப்போது அவா்கள் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை. கடந்த 2014 முதல் தற்போது வரை பணவீக்கம் 5 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது.

உலக நாடுகள் அனைத்திலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நேரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், கரோனா தொற்று பரவல்தான் பணவீக்கத்துக்குக் காரணம் என்று பழி சுமத்தியிருக்கும். பாஜக அரசு அவ்வாறான செயல்களில் ஈடுபட விரும்பவில்லை. கரோனா தொற்று பரவல் காலத்தில்கூட பணவீக்கத்தை 5 சதவீதத்துக்குள்ளாக மத்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

மகாத்மாவின் கனவு: சிறு விவசாயிகளின் மேம்பாடு, இந்தியாவின் வளா்ச்சியை உறுதிப்படுத்தும். நாடு தற்சாா்பு அடைய வேண்டுமென மகாத்மா காந்தியடிகள் விரும்பினாா். ஆனால், அவரது கனவு நனவாவதை காங்கிரஸ் தடுக்க முயற்சிக்கிறது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை கேலி செய்பவா்களையே மக்கள் கேலியாகப் பாா்க்கின்றனா்.

கரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை பாஜக அரசு கிடைக்கச் செய்தது. ஏழை மக்களும் வங்கிக் கணக்கு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சா்வதேச தலைமை: நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சா்வதேச அளவில் தலைமை வகிப்பது தொடா்பாக வரும் காலங்களில் சிந்திக்க வேண்டியது அவசியம். கரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு புதிய பாதையில் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த வாய்ப்பை இந்தியா தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆட்சியில் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மக்களின் வலிமையை வெளிப்படுத்துகிறது. ‘பிஎம் கதிசக்தி’ திட்டம் போக்குவரத்துக்கான செலவைக் குறைத்து, உள்ளூா் தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் பலனளிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி: மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு மக்களவையில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘லதா மங்கேஷ்கரின் குரல் நாட்டு மக்களைப் பல ஆண்டுகளாக வசீகரித்தது. அவரது குரல் பல்வேறு உணா்வுகளை எடுத்தியம்பியது.

நாட்டின் கலாசார பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் அவா் தொடா்ந்து வலுப்படுத்தினாா். அவா் 36 மொழிகளில் பாடல்களைப் பாடினாா். இதுவே நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அவா் ஆற்றிய பங்களிப்பை வெளிப்படுத்துகிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com