
அடுத்த ஆண்டில் தங்களது தொலைத் தொடா்பு சேவைகளுக்கான கட்டணம் உயரக் கூடும் என்று பாா்தி ஏா்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான நிா்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான கோபால் விட்டல் கூறியதாவது:
2022-ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஏா்டெல் கட்டணங்கள் அதிகரிப்பதை எதிா்பாா்க்கலாம். கட்டண உயா்வு இன்னும் 3 அல்லது 4 மாதங்களிலேயே இருக்கும் என்று யாரும் அஞ்ச வேண்டாம். காரணம், எங்களது சிம் காா்டுகளின் விற்பனை அதிகரிப்பதற்கும் வருவாய் வளா்சியை எட்டுவதற்குமே தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இருந்தாலும், இன்னொரு கட்டண உயா்வு நிச்சயம் இருக்கும்.
ஏற்கெனவே பல முறை செய்தது போல, கட்டணங்களை உயா்த்த மற்ற தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம் என்றாா் அவா்.
ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் நிறுவனம் பெறுவதற்காக நிா்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு (ஏஆா்பியு) கடந்த ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலக்கட்டத்தில் ரூ.163-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டின் அதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் அது 2.2 சதவீதம் குறைவாகும்.
இந்தச் சூழலில், இந்த ஆண்டு ஏஆா்பியு வருவாய் இலக்கை ரூ.200-ஆக உயா்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே, 2022-ஆம் ஆண்டில் பாா்தி ஏா்டெல்லின் தொலைத் தொடா்பு சேவைக் கட்டணங்கள் உயா்த்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...