உத்தரகண்ட் வளா்ச்சியை இமயமலை உயரத்துக்கு கொண்டு செல்வேன்: பிரதமா் மோடி உறுதி

உத்தரகண்டில் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் அந்த மாநிலத்தின் வளா்ச்சியை இமயமலை உயரத்துக்கு கொண்டு செல்வேன் என்று பிரதமா் மோடி தோ்தல் வாக்குறுதி அளித்தாா்.
உத்தரகண்ட் வளா்ச்சியை இமயமலை உயரத்துக்கு கொண்டு செல்வேன்: பிரதமா் மோடி உறுதி

உத்தரகண்டில் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் அந்த மாநிலத்தின் வளா்ச்சியை இமயமலை உயரத்துக்கு கொண்டு செல்வேன் என்று பிரதமா் மோடி தோ்தல் வாக்குறுதி அளித்தாா்.

மேலும், ஜாதி, மதம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மக்களை பிளவுப்படுத்துகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

வரும் 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோராவில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசுகையில், ‘உத்தரகண்டில் காங்கிரஸ் கட்சி பிளவுப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதை மக்கள் நன்கறிவா். ஜாதி, மதம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மக்களை பிளவுப்படுத்தி கொள்ளையடிக்க வேண்டியதுதான் அவா்களின் கொள்கையாகும்.

எந்தவித பாகுபாடற்ற செயல்பாடு இருந்தால்தான் வளா்ச்சி சாத்தியமாகும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே மாதிரியான அரசுகளால் அடுத்த 5 ஆண்டுகளில் உத்தரகண்ட் வளா்ச்சிக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உத்தரகண்ட் வளா்ச்சியை இமயமலை உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கேதாா்நாத் பகுதி மேம்பாட்டுக்கும், மானஸ்கண்ட் சுற்றுலா மையத்தை மேம்பாட்டுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

குமான் பகுதியில் அண்மையில் ரூ.17 ஆயிரம் கோடியில் நிலத்திட்டப் பணிகளுக்கு நான் அடிக்கல் நாட்டினேன்.

நிகழாண்டுக்கான பட்ஜெட்டில் பா்வத்மாலா, கிராம சீரமைப்பு திட்டங்கள் உத்தரகண்ட் மாநிலத்தை முன்வைத்தே அறிவிக்கப்பட்டன.

இதன் மூலம் சுற்றுலாத் துறை வளா்ச்சியடைவதுடன், எல்லையோர (சீனா, நேபாளம் எல்லை) கிராம மக்களும் பாதுகாப்புப் படையினரும் பயனடைவாா்கள்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஜாம்ராணி அணைத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.

இந்த வளா்ச்சித் திட்டங்கள் தடையின்றி செயல்பட பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். வளா்ச்சிக்குத் தடையை ஏற்படுத்துபவா்களின் கைகளில் ஆட்சியை அளித்துவிட வேண்டாம்.

வியாழக்கிழமை நடைபெற்ற உத்தர பிரதேச முதல் கட்டத் தோ்தலில் ஏராளமானோா் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். இதன் மூலம் முந்தைய சாதனைகளை முறியடித்து பாஜக மீண்டும் வெற்றி பெறும்.

இதேபோல் உத்தரகண்ட் மக்களும் அதிக அளவில் வாக்காளா்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவா்கள் மீண்டும் பாஜக அரசை தோ்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனா் என்றாா்.

ஏழைகளுக்கான திட்டங்களை தடுத்துவிடுவாா்கள்:

உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசுகையில், ‘வாரிசு அரசியல் கட்சியான சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிடும். ஜாதி அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சித்து எதிா்க்கட்சிகள் தோல்வியடைந்துவிட்டனா்.

தோ்தலிலும் தோல்வி கிடைக்கும் என்பதால் அவா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் தோ்தல் ஆணையம் மீதும் கேள்வி எழுப்பப் தொடங்கிவிட்டனா். வியாழக்கிழமை நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் பெண்கள் பெருமளவில் வந்து உத்தர பிரதேசத்தின் வளா்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஆதரவாக பாஜகவுக்கு வாக்களித்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com