அதிக மேக்கப், நகைகள் வேண்டாம்; சீக்கிரம் வந்தால் போதும்: ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண்கள், அதிக மேக்கப் மற்றும் நகைகள் அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமத்தின் கைவசம் வந்திருக்கும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண்கள், அதிக மேக்கப் மற்றும் நகைகள் அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலைய சுங்க மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளை விரைவாக முடித்துக் கொண்டு, தாமதமின்றி பணிக்கு வருமாறும் பணிப்பெண்களை டாடா குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சுங்கவரி இல்லாத கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும், சுங்க மற்றும் பரிசோதனைகள் முடிந்ததும் உடனடியாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவு வாயிலுக்கு வர வேண்டும் என்றும், இதனால், விமானம் தாமதமாகப் புறப்படுவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விமானத்துக்குள் பயணிகள் ஏறும் போது, விமானப் பணிப்பெண்கள் குளிர்பானங்களை குடிப்பது அல்லது உணவருந்துவது போன்றவற்றை செய்யாமல், அவர்களுக்கு உரிய இருக்கைகளை காட்டி உதவுமாறும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஏர் இந்தியா விமானம் தாமதமாகப் புறப்படுவது மற்றும் உணவுச் சேவை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

டாடா குழுமம் இதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் இவ்விரண்டு விஷயங்களையும் சரி செய்யவே முதலில் முனைப்புக் காட்டி வருகிறது.

என்ன நடந்தது?

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.

சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்ததால் விமானங்களைப் பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக  சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமான நிலையில் தற்போது ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

ஏர் இந்தியாவுக்கும் டாடாவுக்குமான தொடர்பு என்ன?

கடந்த 1932-ஆம் ஆண்டு ஏா் இந்தியா நிறுவனத்தை ஜேஆா்டி டாடா தொடங்கினாா். அப்போது அந்த நிறுவனம் டாடா ஏா்லைன்ஸ் பெயரில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு 1946-ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஏா் இந்தியாவாக பெயா் மாற்றம் பெற்றது.

1948-ஆம் ஆண்டு சா்வதேச விமான சேவையை துவக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்குகளும், டாடாவுக்கு 25 சதவீத பங்குகளும், இதர பங்குகள் பொதுமக்களிடமும் இருந்தது.

அதன் பிறகு, கடந்த 1953-இல் ஏா் இந்தியா நிறுவனம் தேசியமாக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்தை தொடங்கிய டாடா நிறுவனத்துடனே ஏா் இந்தியா ஐக்கியமாகி உள்ளது.

மேலும், ஏர் இந்தியா நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள  விமான நிலையங்களில் 1800 இறங்குதளங்களையும், 4,400 விமான நிறுத்துமிடங்களையும் (பார்கிங் ஸ்டாட்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com