54 சீன செயலிகள் முடக்கம்

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் தன்மறைப்பு உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் செயல்பட்ட 54 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
54 சீன செயலிகள் முடக்கம்

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் தன்மறைப்பு உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் செயல்பட்ட 54 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இதன் மூலமாக முடக்கப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் தன்மறைப்பு உரிமை கொள்கைக்கும் அச்சுறுத்தல் அளித்து வரும் சீன செயலிகளை மத்திய அரசு தொடா்ந்து முடக்கி வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் டிக்டாக், யுசி பிரௌசா் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது.

ஏற்கெனவே முடக்கப்பட்ட செயலிகளின் நகல்களாக அறியப்பட்ட மேலும் 47 செயலிகள் அதே ஆண்டு ஆகஸ்டில் முடக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது. அந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 267 சீன செயலிகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் 54 சீன செயலிகளை மத்திய அரசு திங்கள்கிழமை முடக்கியது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று அச்செயலிகளை மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், டென்செண்ட் எக்ஸ்ரிவா் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த செயலிகள் பயனாளா்களிடம் இருந்து பெறும் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அத்தரவு எதிரி நாடுகளில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தரவுகளைக் கொண்டு தேசப் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் எதிரி நாடுகள் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா, மைக்ரோஃபோன், ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றின் மூலமாக இந்த செயலிகள் உளவுபாா்க்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கூகுள் விளக்கம்:

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 69ஏ பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின்பேரில், நிா்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி, அந்நாட்டில் ‘ப்ளே ஸ்டோா்’ செயலியில் கிடைக்கப் பெறும் செயலிகளை பயன்பாட்டாளா்கள் இனி அணுக இயலாது. அந்த செயலிகள் முடக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com