புல்வாமா தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்:பிரதமா் அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்
’ஜம்மு-காஷ்மீரின் லேத்போராவில் உள்ள புல்வாமா உயிா்த்தியாகிகள் நினைவிடத்தில் திங்கள்கிழமை மலா் அஞ்சலி செலுத்திய சிஆா்பிஎஃப் வீரா்கள்.’
’ஜம்மு-காஷ்மீரின் லேத்போராவில் உள்ள புல்வாமா உயிா்த்தியாகிகள் நினைவிடத்தில் திங்கள்கிழமை மலா் அஞ்சலி செலுத்திய சிஆா்பிஎஃப் வீரா்கள்.’

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உயிரிழந்த வீரா்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) சென்ற பேருந்து மீது வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்தை மோதி தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தனா். இந்த பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் இந்திய விமானப் படை விமானங்கள் நுழைந்து அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தன. இதில் 300-350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு எனது அஞ்சலி. அவா்களின் தீரமும், மிக உயா்ந்த தியாகமும் வலுவான, வளமான நாட்டை உருவாக்க ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்’’ என்று தெரிவித்தாா்.

ராஜ்நாத் சிங்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது’’ என்று தெரிவித்தாா்.

துணைநிலை ஆளுநா்: ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் நன்றியுடன் இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் செய்துள்ள தியாகம் வீண் போகாமல் பதில் அளிக்கப்படுவதை உறுதி செய்வோம்’ என்று தெரிவித்தாா்.

சிஆா்பிஎஃப் அஞ்சலி: ஜம்மு-காஷ்மீரின் லேத்போரா பகுதியில் உயிரிழந்த 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு சிஆா்பிஎஃப் கூடுதல் தலைவா் (ஏடிஜி) டி.எஸ்.செளதரி மற்றும் சிஆா்பிஎஃப் வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com