புது தில்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் புரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே. மிஸ்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின் வெளியுறவு அமைச்சகச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கும், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.
உக்ரைனில் 20,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் கடந்த சில தினங்களில் 4,000 பேர் மீட்டு வரப்பட்டனர்.
உக்ரைன் கள நிலவரமானது அதிவேகமாக கடினமானதாக மாறி வருகிறது. இருப்பினும், அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.