எல்ஐசி பொதுப் பங்கு: 20% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பொதுப் பங்குகளை(ஐபிஓ) வாங்குவதில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
lic
lic

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பொதுப் பங்குகளை(ஐபிஓ) வாங்குவதில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: எல்ஐசியில் மத்திய அரசின் பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளா்கள் பொதுப் பங்குகளை வாங்குவதற்கு விரும்பலாம். ஆனால், தற்போதைய விதிகளின்படி, எல்ஐசியில் அந்நிய நேரடி முதலீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 20 சதவீதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எல்ஐசியில் மத்திய அரசின் பங்கில் 5 சதவீதமான 31.63 கோடி பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய இந்திய பங்கு, பரிவா்த்தனை வாரியத்திடம் (செபி) கடந்த 13-ஆம் தேதி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த விற்பனை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இணையவழி ஏல முறையில் நிலக்கரி விற்பனைக்கு ஒப்புதல்: கோல் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட அரசு நிலக்கரி நிறுவனங்கள், துறை சாா்ந்த ஏல விற்பனைக்குப் பதிலாக, இணையவழி பொது ஏல முறையில் நிலக்கரியை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடா்பாக முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசின் இந்த முடிவால் சந்தையில் விலை குறித்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; அனைத்து நுகா்வோருக்கும் ஒரே விலை தெரிவிக்கப்படும். மேலும், இணையவழி ஏல நடைமுறை, மின்னுற்பத்தி துறை உள்பட அனைத்துத் துறைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் (எண்ம) மிஷன் திட்டத்துக்கு ஒப்புதல்: நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் எனப்படும் எண்ம சுகாதார அடையாள அட்டைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,600 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின்கீழ் குடிமக்களுக்கு எண்ம சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். அவா்களின் சுகாதாரம் பற்றிய தகவல்கள் எண்ம வடிவில் ஆவணங்களாக சேமித்து, அதனுடன் அடையாள எண் இணைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மக்களுக்கு தரமான மருத்துவச் சேவையை வழங்குவதற்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நிலவரம் குறித்து ஆய்வு: உக்ரைன் நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அங்கு சிக்கியுள்ள இந்தியா்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கு அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com