தமிழ்மொழியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

பல்வேறு மொழிகளில் பிரபலமான இந்தியப் பாடல்களைக் கொண்ட விடியோக்களை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: பல்வேறு மொழிகளில் பிரபலமான இந்தியப் பாடல்களைக் கொண்ட விடியோக்களை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, இது இளைஞர்களை பிரபலமாக்குவது மட்டுமின்றி நாட்டின் பன்முகத்தன்மையை புதிய தலைமுறையினருக்கு கொண்டுச் செல்லும் என்று கூறினார். 

அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சியின் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், மொழி, உடை, உணவு, நீர் ஆகியவற்றில் குழப்பம் ஏற்படுத்துபவர்களும், பங்கீடு கேட்பவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர், ஆனால் உலகில் வேறு எங்கும் இது போல் இல்லை என்று கூறினார்.

மக்கள் தங்கள் மொழியை பெருமையுடன் பேச வேண்டும், மொழிகளின் செழுமையில் இந்தியாவுடன் யாரையும் ஒப்பிட முடியாதது.

சமீபத்தில் சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், குடியரசு நாளான்று நாட்டின் தேசிய கீதம் உள்பட பல இந்தி பாடல்களை உதட்டளவில் ஒத்திசைத்து (ஹம்மிங்) சமூக ஊடகங்களில் வைரலான தான்சானியா நாட்டின் இரட்டை  சகோதிரிகளான கிலி பால் மற்றும் நீமா ஆகியோர் இந்திய இசையில் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்ட மோடி, அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களைப் போலவே நம் குழந்தைகளும் பல்வேறு மொழிகளில் பிரபலமான இந்தியப் பாடல்களுக்கு ஏற்ப உதடுகளை ஒத்திசைத்து விடியோக்களை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி,  ஒரு மாநில இளைஞர்கள் தங்கள் விடியோக்களை மற்றொரு மாநிலத்தின் பிரபலமான பாடல்களுடன் உருவாக்குவது அவர்களுக்கு அனுபவமாக இருக்கும்." 'ஒரே இந்தியா வளமான இந்தியா' என்பதை மறுவரையறை செய்து இந்திய மொழிகளை பிரபலப்படுத்துவோம் என்று கூறினார்.

மேலும் "நம் தாய் நம்முடைய வாழ்க்கையை வடிவமைக்கிறதைப் போலவே, தாய்மொழியும் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறது.

தாய் மற்றும் தாய்மொழி இரண்டும் சேர்ந்துதான் வாழ்வின் அடித்தளத்தை வலுப்படுத்துகின்றன; அது நிரந்தரமான கடன்.

நம் தாயை எப்படி கைவிட முடியாதோ, அதே போல் தாய் மொழியையும் விட்டு விட முடியாது” என்று தாய் மொழியின் பலன் குறித்து வலியுறுத்தினார். 

உலகின் பழமையான, தொன்மையான  மொழியான "தமிழ்" இந்தியாவில் உள்ளது, இதனை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். அதே வழியில், பல பழங்கால வேதங்களும், அதன் வெளிப்பாடும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. 

இந்திய மக்கள் 121 வகையான தாய்மொழிகளுடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்வதுடன், அவற்றில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களால் 14 மொழிகள்  பேசப்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.

"2019 ஆம் ஆண்டில், உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஹிந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.

மொழி என்பது வெறும் வெளிப்பாட்டு ஊடகம் மட்டுமல்ல, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

"தாய்மொழிகளுக்கென தனியான அறிவியல் உண்டு. இந்த அறிவியலைப் புரிந்துகொள்வதற்காக, தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழியில் படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை படிப்புகள் அந்தந்த மாநில மொழிகளிள் கற்பிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

சிலைகள் மீட்பு: சில ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலையை இத்தாலியில் இருந்து இந்தியா சமீபத்தில் மீட்டதாக குறிப்பிட மோடி, தனது தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து, கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கடத்தல் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற இந்திய சிலைகளின் எண்ணிக்கை 200க்கும் மேற்பட்டவை.  2013-ஆம் ஆண்டு வரை சுமார் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தது. 2014 இல் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான சிலைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அந்த நாடுகள் சிலைகளை மீட்பதற்கான உதவிகளை செய்தன.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்: கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் பார்வையை மீட்டெடுத்த விவரத்தை பகிர்ந்து கொண்ட மோடி, இதனை தன்னுடன் பகிர்ந்து கொள்ளும்போது ஒடிங்கா உணர்ச்சிவசப்பட்டார், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆயுர்வேதத்தால் இதே போன்ற பலன்களைப் பெற்று வருகிறார்கள் என்று கூறினார்.

பிரிட்டனைச் சேர்ந்த இளவரசர் சார்லஸ் ஆயுர்வேதத்தின் பெரும் அபிமானிகளில் ஒருவர் என்றும் கூறினார்.

"நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக சுகாதாரத் துறையை சீர்திருத்தம் செய்து மக்களுக்கு முழு அளவில் பயன்தரும் வகையில் ஆயுர்வேதத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறோம்.

ஆயுஷ் அமைச்சகத்தின் உருவாக்கம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஆரோக்கியத்தை பிரபலப்படுத்துவதற்கான நமது உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை உலக அளவில் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். 

மேலும், சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை உலக சுகாதார நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் ஆயுர்வேத துறையில் பல புதிய ஸ்டார்ட்-அப்கள் உருவாகியுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று மோடி கூறினார்.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்திய பெண்கள் பழைய கட்டுக்கதைகளை அகற்றி வருகிறார்கள், மேலும் அவர்கள் பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை புதிய உயரங்களை எட்டுகிறார்கள் என்றார்.

ராணுவத்திலும், இப்போது புதிய மற்றும் பெரிய பொறுப்புகளில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள், குடியரசு தினத்தன்று பெண்களும் நவீன போர் விமானங்களை ஓட்டினர்.

திருமணத்திற்கான பொதுவான வயதை நிர்ணயிப்பதன் மூலம் மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம உரிமை வழங்க நாடு முயற்சிக்கிறது, "பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ" மற்றும் முத்தலாக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளால் வெவ்வேறு துறைகளில் அவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினத்தையொட்டி, குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பெற்றோர்கள் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வரவிருக்கும் சிவராத்திரி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகள் வருகின்றன. "உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை" கொடுத்து, உள்ளூர் சந்தைகளில் இருந்து  பொருள்களை வாங்கி பண்டிகைகளை ஆனந்தமாக கொண்டாட வேண்டும் என்று மக்களை வலியுறுத்திய மோடி, கரோனா முன்னெச்சரிக்கையை மறக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com