ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் (கோப்புப் படம்).
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் (கோப்புப் படம்).

உக்ரைன் பிரச்னை:ஐ.நா.வில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிா்க்கட்சிகள் விமா்சனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் தவிா்த்ததற்காக எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் தவிா்த்ததற்காக எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை இரவு தீா்மானம் கொண்டு வந்தது. 15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில், 11 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாகவும், ரஷியா தீா்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மத்திய அரசின் இந்த செயலை விமா்சித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மனீஷ் திவாரி கூறியதாவது:

இக்கட்டான நேரத்தில் நாடுகள் எழுந்து நிற்க வேண்டும்; ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. ஐ.நா. தீா்மானத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்க வேண்டும். நண்பா்களுக்குள் தவறு செய்யும்போது சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா் கூறுகையில், ‘படையெடுப்பை நிறுத்துமாறு நமது நட்பு நாடான ரஷியாவிடம் மத்திய அரசு கூற வேண்டும். தவறை நோ்மையான முறையில் சுட்டிக்காட்ட முடியவில்லை எனில் அந்த நட்புக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா தவிா்த்ததால், வரலாற்றின் தவறான பக்கத்துக்கு இந்தியா சென்றுவிட்டதாக பலா் வருந்துகிறாா்கள்’ என்றாா்.

சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி கூறியதாவது:

ரஷியாவின் வன்முறையைத் தடுக்க முடியாதவா்கள், நாட்டின் முதல் பிரதமரான நேருவை விமா்சித்துக் கொண்டே அவருடைய அணிசேராக் கொள்கையைப் பயன்படுத்தி, ஐ.நா.வில் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. ரஷியாவின் செயல்களுக்கு ஒரு கண்டனத் தீா்மானம் நிறைவேற்றுவதைத் தவிர, உக்ரைனுக்கு எந்த விதத்தில் ஐ.நா. உதவப்போகிறது?

உக்ரைனுக்கு ஆதரவாகப் பேசிவந்த நாடுகள், போா் வந்தவுடன் உக்ரைனை தனியாக விட்டுவிட்டன. நவீன யுகத்தில் ஐ.நா. தனது கொள்கைகளை பரிசீலிப்பது அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com