அன்னை தெரசா அறக்கட்டளைக்கு உதவிக்கரம் நீட்டிய ஒடிசா முதல்வர்

அன்னை தெரசா அறக்கட்டளைக்கு ஒடிசா அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அறக்கட்டளைக்கு நிதியதவி வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

அன்னை தெரஸா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம்சாட்டியிருந்தார். 

அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் கீழ அதற்கு வழங்கப்பட்ட உரிமம் கடந்த் அக்டோபர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. இருந்தபோதிலும், அந்த அறக்கட்டளை உள்பட நிலுவையில் இருந்த பிற அறக்கட்டளைகளின் பதிவுக் காலத்தை டிசம்பா் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதே நேரம், அன்னை தெரஸா அறக்கட்டளையின் பதிவு புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பரிசீலித்தபோது, அதில் சில பாதகமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, உரிய நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

அந்த அறக்கட்டளையின் பதிவு செல்லத்தக்க காலம் வரும் 31-ஆம் தேதி வரை உள்ளது என்பதால், அதன் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. மாறாக, அந்த அறக்கட்டளை கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது" என விளக்கம் அளித்தது.

இந்தியாவில் இயங்கும் அரசு சாரா அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளை பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின்படி உரிமம் பெற வேண்டும். இம்மாதிரியாக பெறப்பட்ட 6,000க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் டிசம்பர் 31ஆம் தேதி இரவுடன் காலாவதியாகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அன்னை தெரசா அறக்கட்டளைக்கு ஒடிசா அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அறக்கட்டளைக்கு நிதியதவி வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒடிசாவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 13 நிறுவனங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 78.76 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. 

எட்டு மாவட்டங்களில் 900க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை பராமரித்து வரும் 13 நிறுவனங்களுக்கு நிதி சென்றடைவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும். ஒடிசாவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி நடத்தும் அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார். 

குறிப்பாக, உணவு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான துயரங்களால் இந்த அமைப்புகளில் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தேவைப்படும் இடங்களில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com