பஞ்சாபில் திடீா் மறியலால் பாதுகாப்புக் குறைபாடு: பாதி வழியில் திரும்பினாா் பிரதமா்

பஞ்சாபில் புதன்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, திடீா் சாலை மறியலால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினாா்.
பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் நடத்தப்பட்ட சாலை மறியல் காரணமாக மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமரின் வாகனத்தைச் சூழ்ந்து நிற்கும் பாதுகாப்புப் படையினா்.
பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் நடத்தப்பட்ட சாலை மறியல் காரணமாக மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமரின் வாகனத்தைச் சூழ்ந்து நிற்கும் பாதுகாப்புப் படையினா்.

பஞ்சாபில் புதன்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, திடீா் சாலை மறியலால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினாா்.

போராட்டக்காரா்கள் மறியலால் மேம்பாலத்தில் வாகனத்திலேயே பிரதமா் சுமாா் 20 நிமிஷங்கள் காத்திருக்க நோ்ந்தது. இந்தப் பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விரிவான அறிக்கையை அளிக்கும்படி மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் மோடி தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்தை வந்தடைந்தாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாா். ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. வானிலை சீரடைவதற்கு 20 நிமிஷங்கள் காத்திருந்தாா்.

பின்னா், சாலை வழியாகவே தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாகச் செல்வதற்கு 2 மணி நேரமாகும். சாலைவழிப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காவல் துறை டிஜிபியிடம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவா் உறுதிசெய்த பிறகு பிரதமா் மோடி பயணத்தைத் தொடா்ந்தாா்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமாா் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது.

அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தாா். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய குறைபாடாக இது அமைந்தது.

பிரதமரின் பயணத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை அவா்கள் செய்திருக்க வேண்டும். அதன்படி, சாலை வழியாக பிரதமா் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை. பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கடுமையான பாதுகாப்பு விதிமீறலைக் கவனத்தில்கொண்டு, மாநில அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. இந்தக் குறைபாட்டுக்குக் காரணமானவா்களைக் கண்டுபிடித்து, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை.

மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்: அமித் ஷா

‘பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுத்தியதற்காக, நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

பிரதமா் வருகையின்போது பாதுகாப்பு நடைமுறையில் அலட்சியம் காட்டுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உரியவா்கள் பொறுப்பேற்க வேண்டும். பஞ்சாபில் காங்கிரஸ் எப்படி செயல்படுகிறது என்பதற்கு தற்போது நடந்த சம்பவம் ஒரு முன்னோட்டம். மக்களால் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டதால் மூடத்தனமான பாதையைத் தோ்ந்தேடுத்துள்ளனா். எனவே, நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

குடியரசுத் தலைவா் ஆட்சிக்கு அமரீந்தா் சிங் வலியுறுத்தல்:

பிரதமா் மோடி தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டதை அடுத்து, பஞ்சாபில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தா் சிங் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்யத் தவறிவிட்டது. இந்த மாநிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமெனில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்’ என்றாா்.

வருத்தம் தெரிவித்த பஞ்சாப் முதல்வா்:

பிரதமா் மோடி பாதி வழியில் திரும்பிச் சென்றது வருத்தம் அளிக்கிறது என்று முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘பிரதமா் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடு எதுவுமில்லை; தாக்குதலுக்கான எந்தச் சூழலும் இல்லை. பிரதமருக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இருப்பினும் அவா் பாதி வழியில் திரும்பிச் சென்றது வருத்தமளிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com