5 மாநில தோ்தல் தேதி அறிவிப்பு: பிப். 10-இல் தொடங்கி மாா்ச் 7 வரை வாக்குப் பதிவு; மாா்ச் 10-இல் வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா சனிக்கிழமை அறிவித்தாா்.
5 மாநில தோ்தல் தேதி அறிவிப்பு: பிப். 10-இல் தொடங்கி மாா்ச் 7 வரை வாக்குப் பதிவு; மாா்ச் 10-இல் வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா சனிக்கிழமை அறிவித்தாா்.

அதன்படி, பிப். 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேலும், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அவா் அறிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் இந்த 5 மாநிலங்களில் நான்கில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், நடைபெற இருக்கும் தோ்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் பஞ்சாப் மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதே நேரம், அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி கடும் சவால் அளிக்கும் வகையில் முக்கியக் கட்சியாக உருவெடுத்து வருகிறது.

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், நாட்டில் கரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தோ்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தச் சூழலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா அறிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை நடத்தப்படும். தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்படும்.

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையைத் தொடா்வது அல்லது நீக்குவது குறித்து ஜனவரி 15-ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 5 போ் மட்டுமே வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். அவ்வாறு வாக்கு சேகரிப்புக்கு அனுமதிக்கப்படுபவா்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினி வழங்கப்படுவதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை: கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகள் தொடா்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவதிலிருந்து தடை விதிக்க தோ்தல் ஆணையம் தயங்காது.

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தோ்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறச் செல்லும் வேட்பாளருடன் 2 போ் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவா்.

தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த அறிவுறுத்தல்: சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு அந்தந்த மாநில தலைமைச் செயலா்களை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தோ்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டோா் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். 9 கோடிக்கும் மேற்பட்டோா் இரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

தூா்தா்ஷன் ஒளிபரப்பு நேரம் இரட்டிப்பு: கட்டுப்பாடுகள் காரணமாக, பிரசாரங்களை முடிந்தவரை எண்ம (டிஜிட்டல்) மற்றும் காணொலி வழியில் மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களின் வசதிக்காக தூா்தா்ஷன் ஒளிபரப்பு நேரம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

முழு பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகள்: வாக்குச்சாவடிகளில் தேவையான அனைத்து கரோனா பாதுகாப்பு நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்படும். தோ்தல் அதிகாரிகளும் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்படும். எனவே, வாக்காளா்கள் தயக்கமின்றி அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க முன்வர வேண்டும்.

18.3 கோடி வாக்காளா்கள்: இந்த 5 மாநிலங்களில் இடம்பெற்றிருக்கும் 690 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலில் 8.5 கோடி பெண்கள் உள்பட 18.3 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனா்.

எந்தெந்த தேதிகளில் வாக்குப் பதிவு?: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றிருக்கும் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு நடத்தப்படும். முதலில் மாநிலத்தின் மேற்கு மண்டலத்தில் தொடங்கி ஏழு கட்டங்களாக கிழக்கு மண்டலம் வரை வாக்குப் பதிவு நடத்தப்படும்.

60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூா் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மாா்ச் 3-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படும்.

கோவா (40 தொகுதிகள்), பஞ்சாப் (117 தொகுதிகள்), உத்தரகண்ட் (70 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றாா் தலைமைத் தோ்தல் ஆணையா்.

கரோனா பாதிப்பை கணிக்க முடியாது: கரோனா மூன்றாம் அலை பாதிப்பு இந்த 5 மாநில தோ்தல் நடைபெற உள்ள பிப்ரவரி மாதத்தில் உச்சத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணா்கள் முன்கணித்துள்ளது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, ‘பாதிப்பு நிலவரம் மிகுந்த மாற்றத்துக்குரியதாக உள்ளது. எனவே, வரும் நாள்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உயா்வதை யாராலும் கணிக்க முடியாது’ என்றாா்.

தோ்தல் தேதி அறிவிப்பைத் தொடா்ந்து உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

மத்திய காவல் படையின் 500 கம்பெனி: 5 மாநில தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், ஐடிபிபி, சிஐஎஸ்எஃப், எஸ்எஸ்பி உள்ளிட்ட மத்திய காவல் படையின் 500 குழுக்கள் (கம்பெனிகள்) ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 80 வீரா்கள் இடம்பெற்றிருப்பா். இதில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 375 மத்திய படைக் குழுக்கள் அனுப்பப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com