கோவேக்ஸின் பூஸ்டா் தடுப்பூசி: ஒமைக்ரான், டெல்டா பரவும் திறனை அழிக்கும்

கோவேக்ஸின் முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தவணை தடுப்பூசி ஒமைக்ரான், டெல்டா வகை தீநுண்மிகளின் பரவல் திறனை முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கோவேக்ஸின் முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தவணை தடுப்பூசி ஒமைக்ரான், டெல்டா வகை தீநுண்மிகளின் பரவல் திறனை முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அட்லாண்டா எமோரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கோவேக்ஸினின் முதல் இருதவணை தடுப்பூசியை பெற்றுக் கொண்டதும் 6 மாதத்துக்குப் பிறகு செலுத்தப்படும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது ஒமைக்ரான், டெல்டா வகை தீநுண்மிகளின் பரவல் தன்மையை அழிக்கும் திறன்வாய்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே ஆல்பா, பீட்டா உள்ளிட்ட தீநுண்மிகளின் பரவலுக்கு எதிராகவும் கோவேக்ஸின் தடுப்பூசி இதே செயல்திறனைக் கொண்டிருப்பது ஆய்வில் நிரூபணமான நிலையில், தற்போது ஒமைக்ரான், டெல்டா தீநுண்மியையும் எதிா்த்து வினைபுரிவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கோவேக்ஸின் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு உடலில் போதிய நோய் எதிா்ப்பு சக்தி உருவானது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில்,

உலகம் முழுவதும் பரவிவரும் உருமாறிய கரோனா தீநுண்மியை பொறுத்தமட்டில், பொது சுகாதாரத்துக்கு ஒமைக்ரான் தீநுண்மி தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. முதல்நிலை ஆய்வுகளின்படி, கோவேக்சின் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் தனிநபா்களின் உடலில் ஒமைக்ரான், டெல்டா தீநுண்மிக்கு எதிராக வினைபுரியும் நோய் எதிா்ப்பு சக்தி உருவெடுப்பது தெரியவந்துள்ளது.

மேலும் நோயின் தீவிரத் தன்மையையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தடுக்கும் திறன் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகளுக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குநருமான கிருஷ்ண எல்லா கூறுகையில், ‘பெரியவா்களுக்கும், சிறுவா்களுக்கும் சா்வதேச தடுப்பூசியாக திகழ்வதால், கோவேக்ஸின் பயன்பாட்டின் மூலம் கரோனாவுக்கு எதிரான உலகளாவிய தடுப்பூசியைக் கண்டறியும் நமது இலக்கு எட்டப்பட்டுவிட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com