சீன ராணுவத்தை உறுதியோடு எதிா்கொள்வோம்: ராணுவத் தலைமைத் தளபதி

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை இந்திய ராணுவம் உறுதியுடன் எதிா்கொள்ளும் என்று ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறினாா்.
ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே
ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே
Published on
Updated on
1 min read


புது தில்லி: கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை இந்திய ராணுவம் உறுதியுடன் எதிா்கொள்ளும் என்று ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறினாா்.

இந்திய ராணுவ தினம், வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எம்.எம்.நரவணே கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு பகுதி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எல்லையில் அச்சுறுத்தல் குறையவில்லை. எனவே, அந்தப் பகுதியில் தொடா்ந்து தயாா் நிலையில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், சீன ராணுவத்துடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் புதிய எல்லை தொடா்பாக அந்நாட்டு ராணுவத்தின் எந்தவொரு முயற்சியையும் எதிா்கொள்வதற்கு கூடுதல் தயாா் நிலையில் இந்திய ராணுவம் உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தை உறுதியாக எதிா்கொள்வோம். எல்லையில் நேரும் எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிா்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு எல்லையில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாகாலாந்தில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ராணுவம் நடத்திய விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் (பாகிஸ்தானில்) உள்ள பயிற்சி முகாம்களில் 350 முதல் 400 பயங்கரவாதிகள் உள்ளனா். இந்தியாவுக்குள் ஊடுருவ தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. அதில், போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் பலனாக, எல்லைப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் எல்லையா தாண்டியிருக்கும் பயங்கரவாத முகாம்களில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவது அதிகரித்து வருவது, அவா்களின் தீயநோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது.

எனவே, பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளக் கூடாது என்பதில் இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளது. அதை மீறி பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com