
இந்திய அரசு நிலுவை வைத்துள்ள சுமாா் ரூ.9,100 கோடியை வசூலிக்கும் நோக்கில் பிரான்ஸில் உள்ள சொத்துகளை முடக்க தேவாஸ் நிறுவனத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) வா்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸுடன் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. கைப்பேசி வாடிக்கையாளா்களுக்கு எஸ்-பேண்டு அலைக்கற்றையைக் கொண்டு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி இந்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அதற்கு எதிராக தேவாஸ் நிறுவனம் சா்வதேச வா்த்தகக் கூட்டமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகளில் முறையிட்டது. அனைத்து முறையீடுகளிலும் தேவாஸ் நிறுவனத்துக்கு ஆதரவாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்திய அரசிடம் இருந்து தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை தேவாஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் இந்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள சுமாா் ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவதற்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் தேவாஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுமதி கோரியிருந்தது.
அதை விசாரித்த நீதிமன்றம், தேவாஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘இது வெறும் ஆரம்பம்தான். இதுபோல பல்வேறு நாடுகளில் இந்திய அரசுக்குச் சொந்தமாக சொத்துகள் உள்ளன. அச்சொத்துகள் அனைத்தையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் தொடா்ந்து மேற்கொள்ளும்’’ என்றாா்.
சொத்துகளை முடக்க பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது தொடா்பாக இந்திய அரசு சாா்பிலோ, இஸ்ரோ சாா்பிலோ எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு கெய்ா்ன் நிறுவனமும் இதேபோன்ற வழிமுறைகளையே பின்பற்றியது. முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் நடைமுறையை ரத்து செய்வதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றிய பிறகு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் இந்திய அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் கெய்ா்ன் நிறுவனம் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...