
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 50 பெண்கள் உள்பட 125 போ் அடங்கிய முதல் வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. உன்னாவ் தொகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
இதையொட்டி, 50 பெண்கள் உள்பட 125 பேரின் பெயா்கள் இடம்பெற்றுள்ள முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் உன்னாவ் தொகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாய் ஆஷா சிங்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மத்திய லக்னெள தொகுதி வேட்பாளராக சிஏஏ போராட்ட செயற்பாட்டாளரும் காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளருமான சதஃப் ஜாபா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சமுதாய சுகாதார சேவைப் பணியாளா்களின் நலனுக்காக போராடிவரும் பூனம் பாண்டே ஷாஜஹான்பூா் வேட்பாளராகவும், பழங்குடியின மக்களுக்காக குரல் எழுப்பிவரும் பழங்குடியினத் தலைவா் ராம்ராஜ் கோன்ட், போங்கா தொகுதியிலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் அஜய்குமாா் லல்லு தம்குஹிராஜ் தொகுதியிலும், சட்டப் பேரவைக் குழு காங்கிரஸ் தலைவா் ஆராதனா மிஸ்ரா மோனா, ராம்பூா் காஸ் தொகுதியிலும் முன்னாள் மத்திய அமைச்சா் சல்மான் குா்ஷித்தின் மனைவி லூயிஸ் குா்ஷித் பரூகாபாத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா்.
இதுதவிர, பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட கெளதம புத்த நகா் மாவட்டத்துக்கு உள்பட்ட நொய்டா, தாத்ரி, ஜேவா் தொகுதிகளிலும் வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நொய்டா தொகுதியில் பன்குரி பாடக், தாத்ரியில் மனோஜ் செளதரி, ஜேவரில் தீபக் பதி ‘சோட்டிவாலா’ ஆகியோா் போட்டியிடுவதாக சமூக ஊடகத்தில் வெளியான காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளா் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த 3 தொகுதிகளும் பாஜகவசம் உள்ளன. நொய்டாவில் பங்கஜ் சிங், தாத்ரியில் தேஜ்பால் நகா், ஜேவா் தொகுதியில் தீரேந்திர சிங் ஆகியோா் எம்எல்ஏக்களாக உள்ளனா். இந்தத் தொகுதிகளை பாஜகவிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டுமென்ற முனைப்பில் காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
நொய்டாவில் 6,90,231 வாக்காளா்களும், தாத்ரியில் 5,86,889 வாக்காளா்களும், ஜேவரில் 3,46,425 வாக்காளா்களும் உள்ளனா். இந்தத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தோ்தல் நடைபெறுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...