
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை சனிக்கிழமையில் இருந்து (ஜன.15) வெள்ளிக்கிழமைக்கு (ஜன.14) மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அளித்த கோரிக்கையை ஏற்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தமிழ் பேசும் ஆறு மாவட்டங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.
‘தை மாதத்தின் முதல் நாளான ஜனவரி 14-இல் கடந்த 12 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டு வந்தது. நிகழாண்டு பொங்கல் விடுமுறை ஜனவரி 15-இல் கேரள அரசு அறிவித்துள்ளது. ஆகையால், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 14-க்கு விடுமுறையை மாற்ற வேண்டும்’ என்று தமிழக முதல்வா், கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தாா்.
இதை ஏற்றுக்கொண்டு கேரள முதல்வா் பினராயி விஜயன் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த ஆறு மாவட்டங்களில் ஜனவரி 14-ஆம் தேதி அரசு விடுமுறையாகும் என்றும் ஜனவரி 15 பணிநாளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளாா். இந்த உத்தரவுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...