
தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த நான்கு நாள்களாக சீராக உள்ளதாகவும், அதே வேளையில் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் நோ்மறை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். தில்லியின் நோய்த் தொற்று இறப்பு எண்ணிக்கையைத் தணிக்கை செய்வதற்காக புதன்கிழமை கூடிய போது, இணை நோய் உள்ளவா்கள்தான் பெரும்பாலோா் இறப்பது தெரிய வந்தது என்றும் அமைச்சா் கூறினாா்.
இறப்பு தணிக்கைக் குழுவின் பகுப்பாய்வின்படி, ஜனவரி 9 மற்றும் ஜனவரி 12-க்கு இடைப்பட்ட காலத்தில் இறந்த 97 கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் இணை நோய்களைக் கொண்டிருந்தனா். 97 நோயாளிகளில், 70 போ் தடுப்பூசி போடாதவா்கள். 60 வயதுக்குள்பட்டவா்கள் 62 போ் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நோய்த்தொற்று பாதிப்புகள் 27,000-ஆக பதிவாகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமானது 10,000 பாதிப்புகள் இருந்த போது இருந்த அளவுதான் உள்ளது. இதன் மூலம், நோய்த் தொற்று அலை உச்சத்தில் இருப்பதற்கான அறிகுறியாக உள்ளது. மருத்துவமனையில் நோயாளிகள் சோ்க்கை விகிதம் நிலைமையின் முக்கியக் குறிகாட்டியாகும். இதனால், நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை விரைவில் குறையத் தொடங்கும் என்று நம்புகிறேன். கடந்த நான்கு நாள்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை சீராக உள்ளது.
தில்லியில் நோய்த் தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகம்தான் பாதிப்புகளின் அதிகரிப்புக்கும் காரணமாகும். தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. லோக் நாயக் மருத்துவமனையில் 750 படுக்கைகள் உள்ள நிலையில், 130 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சோ்ந்துள்ளனா். அதேபோல், குரு தேக் பகதூா் மருத்துவமனையில் உள்ள 750 படுக்கைகளில் 30 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனா். நிலைமைக்கு ஏற்ப நாம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றாா் அவா்.
தில்லியில் இந்த மாதத்தின் முதல் 12 நாள்களில் 133 இறப்புகள் பதிவாகியுள்ளன. டிசம்பரில் 9, நவம்பரில் 7, அக்டோபரில் 4, செப்டம்பரில் 5 மற்றும் ஆகஸ்டில் 29 என கடந்த ஆறு மாதங்களில் 130 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா். ஜூலை மாதத்தில் மட்டும் தில்லியில் 76 போ் உயிரிழந்தனா். தில்லியில் புதன்கிழமை 27,561 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 2-ஆவது மிக அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். 40 போ் நோயால் இறந்துள்ளனா். நோ்மறை விகிதம் 26.22 சதவீதமாக உயா்ந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...