இந்தியாவுக்கு புதிய பார்வை: வழிகாட்டும் ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசத்தில் முக்கிய போட்டியாளராக கருதப்படாத காங்கிரஸ், இளைஞர்கள் மற்றும் பெண்களை நம்பி களத்தில் இறங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை மையப்படுத்திய 'இளைஞர்களுக்கான' தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. 

தேர்தல் அறிக்கையை வெற்று வார்த்தைகள் இல்லாத புதிய பார்வையை அளிக்கும் ஆவணம் என்றும் இளைஞர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் சிந்தனை போக்கை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "இந்தியாவுக்கு ஒரு புதிய பார்வை தேவை என்பது எங்கள் புரிதல். எங்கள் நம்பிக்கை. இந்தியாவின் புதிய பார்வைக்கு, நீங்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். மாநிலத்தின் இளைஞர்கலுக்கு காங்கிரஸ் கட்சியால் மட்டுமே புதிய பார்வையை அளிக்க முடியும்.

வேலை வாய்ப்பை மறந்துவிடுங்கள், இன்று இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். ஏனென்றால் எல்லா வேலைகளும் 2-3 தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்படுகிறது. எனவே, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களிடம் பேசி, அவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது" என்றார்.

பின்னர் பேசிய உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, "மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்புதான். இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், அவர்களின் பிரச்னைகள் என்ன என்பதையும் பார்த்தோம். எல்லா அரசியல் கட்சிகளும், 25 லட்சம் வேலைகள், 30 லட்சம் வேலைகள் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால் அதை எப்படிச் செய்வார்கள் என்பதை யாரும் விரிவாக விளக்கவில்லை. இந்த இளைஞர் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அதைச் செய்துள்ளது.

இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் வேலை கிடைப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவர்கள் தகுதியுடையவர்கள். ஆனல், அவர்களிடம் வேலை இல்லை. அவர்கள் விரும்பும் மற்றும் தேவையான வேலைவாய்ப்பைப் பெற உதவுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அதுமட்டுமின்றி, தேர்வின் போது இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தேர்வுகள் மற்றும் அட்டவணைகளை மனதில் வைத்து, வேலை நாட்காட்டியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது மிக முக்கியமான விஷயம் மற்றும் மிகவும் தேவை. உத்தரபிரதேசத்தில் ஆண்டுதோறும் இளைஞர் விழாவை நடத்தவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "2014இல் பாஜக முன்வைத்த தொலைநோக்கு முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை அவர்கள் பேரழிவாக மாற்றியுள்ளனர். பாஜகவில் உள்ள சிலர் கூட ஏதோ தவறு நடந்திருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். நாங்கள் வெறுப்பை பரப்பவில்லை, மக்களை ஒன்றிணைக்கிறோம், இளைஞர்களின் வலிமையுடன் புதிய உத்தரபிரதேசத்தை உருவாக்க விரும்புகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com