பாஜகவில் இணைந்த ஆர்பிஎன் சிங் யார்? காங்கிரஸிலிருந்து விலகியது ஏன்?

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஆர்பிஎன் சிங் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைச் சந்தித்தார்.
பாஜகவில் இணைந்த ஆர்பிஎன் சிங் யார்? காங்கிரஸிலிருந்து விலகியது ஏன்?


காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஆர்பிஎன் சிங் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைச் சந்தித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங் இன்று (செவ்வாய்க்கிவமை) பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, தில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

"ஒரே அரசியல் கட்சியில் நான் 32 ஆண்டுகளைக் கழித்தேன். ஆனால், கட்சி முன்பிருந்ததைப்போல தற்போது இல்லை. தற்போது இந்தியா குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தொண்டனாகப் பணியாற்றுவேன்" என்றார்.  

இதன்பிறகு, அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "தற்போது இருக்கும் காங்கிரஸ் நான் பணியாற்றியபோது இருந்த காங்கிரஸ் அல்ல என்பதை செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தெளிவுபடுத்திவிட்டேன். முன்பிருந்த சித்தாந்தமல்ல. அதுபற்றி மேற்கொண்டு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்றார். மனைவி சோனியா சிங் கட்சியில் இணைவது மற்றும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஊகங்களுக்குப் பதிலளிக்கையில், "நான் மட்டும்தான் அரசியலில் இருக்கிறேன். கட்சி என்ன செய்யச் சொல்கிறதோ அதை நிச்சயமாகச் செய்வேன்" என்றார்.

பாஜகவில் இணைந்த பிறகு கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை தில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்தார்.

ஆர்பிஎன் சிங் பாஜகவில் இணைந்தபிறகு காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து அவரது பெயர் அகற்றப்பட்டது. அவர் ராஜிநாமா செய்வதற்கு முன்பு ட்விட்டரில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், ஜார்க்கண்ட் மேலிடப் பொறுப்பாளர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை இணையமைச்சர் உள்ளிட்டவற்றை தனது சுயகுறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்.

ரதன்ஜித் பிரதாப் நரைன் சிங் முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். 2009-14இல் குஷிநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர் உத்தரப் பிரதேசத்தில் 1996 முதல் 2009 வரை பத்ரௌனா தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்துள்ளார். எனினும், 16-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ராஜேஷ் பாண்டேவிடம் தோல்வியைச் சந்தித்தார். 2003-2006 வரை காங்கிரஸ் கட்சியின் செயலராகவும் இருந்துள்ளார் ஆர்பிஎன் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com