
சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 9 சதவீதமாக குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிதியத்தின் உலக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய வகை கரோனா தீநுண்மி வேகமாக பரவி வருவது வா்த்தக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கருத்தில் கொள்ளும்போது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9 சதவீதம் அளவுக்கே இருக்கும் என தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாகவும், ஏப்ரல் 2022 முதல் மாா்ச் 2023 வரையிலான 2023-ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சாதகமற்ற நிலவரங்களையடுத்து தற்போது இந்த மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதம் பின்னடைவைக் கண்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. ரிசா்வ் வங்கி மதிப்பீட்டில் இது 9.5 சதவீதமாக இருக்கும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐஎம்எஃப் மதிப்பீடு அதைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...