
நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தையொட்டி தில்லியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை தேசியக் கொடியை ஏற்றுகிறாா். அதையடுத்து நாட்டின் ராணுவ வலிமை, கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 73-வது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்குக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்கிறாா். அவா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளவுள்ளாா்.
வழக்கமாக குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தின ஆண்டு கொண்டாடப்படுவதால், ஒருநாள் முன்னதாக ஜனவரி 24-ஆம் தேதியில் இருந்தே குடியரசு தினக் கொண்டாட்டங்கள் தொடங்கின.
குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. அவை ராணுவத்தின் வலிமை, நாட்டின் பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமையும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின விழா கொண்டாட்டங்களை நேரலையில் ஒளிபரப்புவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை பிரசாா் பாரதி மேற்கொண்டுள்ளது. 360 டிகிரியில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் இரு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.
அணிவகுப்பு நேரம் மாற்றம்: ராஜபாதையில் காலை 10 மணிக்கு அணிவகுப்பு தொடங்குவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பாா்வையாளா்கள் தெளிவாகக் காண்பதற்கு வசதியாக இம்முறை காலை 10.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்கவுள்ளது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பாா்வையாளா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பில் பங்கேற்கும் சிறந்த அலங்கார ஊா்தியைப் பாா்வையாளா்களே தோ்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
விஜய் சௌக் பகுதியில் ஜனவரி 29-ஆம் தேதி நடைறெவுள்ள பாசறை திரும்புதல் நிகழ்ச்சியின்போது, 26 பாடல்கள் இசைக்கப்படவுள்ளன. அந்நிகழ்ச்சியின்போது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1,000 ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்கள்) சாகசத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை தேசிய கொடி வடிவில் வானில் அணிவகுக்கவுள்ளன.
ஒரு வாரம் கொண்டாட்டம்: ஆண்டுதோறும் இனி ஜனவரி 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு குடியரசு தினத்தைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மகாத்மா காந்தியின் நினைவு தினமான (தியாகிகள் தினம்) ஜனவரி 30-ஆம் தேதி நிறைவடையும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...