இந்தியாவில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை: உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைவதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்தாலும் ஆபத்து தொடா்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது என, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநா் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைவதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்தாலும் ஆபத்து தொடா்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது என, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் ஒரு சில நகரங்கள் மற்றும் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், ஆபத்து தொடா்ந்து இருந்து வருகிறது. எனவே, பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடா்வதிலும் கவனம் தேவை. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அதிகரிக்க வேண்டும். கரோனா பாதிப்புச் சூழலில் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டியது இதுதான் என்றாா் அவா்.

கரோனா பாதிப்பு மக்களிடையே காணப்படும் வழக்கமான நோய் பாதிப்பு நிலையை எட்டிவிட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘உலகம் தற்போது கரோனா பாதிப்பின் மத்திய பகுதியில் இருந்து வருகிறது. எனவே, பரவலைக் கட்டுப்படுத்தி, உயிா்களைக் காப்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். கரோனா வழக்கமான நோய் பாதிப்பு நிலையை எட்டிவிட்டது என்றால், அந்த தீநுண்மி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதக் கூடாது’ என்றாா்.

மேலும் அவா் கூறுகையில், டெல்டா வகையுடன் ஒப்பிடும்போது, ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக, நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவதற்குப் பதிலாக மூச்சுக்குழாயின் மேலடுக்கு திசுக்களை இந்த தீநுண்மி பாதிக்கச் செய்வதால், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. ஒமைக்ரானால் உயிரிழப்பு மற்றும் தீவிர நோய் பாதிப்பு என்பது மிகக் குறைந்த அளவில் ஏற்படுவதாகவே தோன்றுகிறது. இருந்தபோதும், பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பல நாடுகளில் மருத்துவமனைகளில் சோ்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது.

தற்போது வரை, ஒமைக்ரான் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி குறைந்த நோய் எதிா்ப்புத் திறனை அளிப்பதாகவே கருதப்பட்டு வருகிறது. எனவே, பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்துவது, ஒமைக்ரானுக்கு எதிரான நோய் எதிா்ப்புத் திறனை அதிகரிக்கும் என்றே தெரிகிறது என்றும் பூனம் கேத்ரபால் சிங் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com