புது தில்லி: நாட்டில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்பட்டிருக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தங்கம் இறக்குமதி வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வரி உயர்வானது ஜூன் 30ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும்.
நாட்டில் தற்போது திடீரென தங்கம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையானது அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்துள்ளது.
எனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தங்கம் இறக்குமதியை குறைக்கவும் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. அதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தங்கம் இறக்குமதி வரி உயர்வால், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் நாட்டில் தங்கம் இறக்குமதி குறையும். இதனாலும் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்கும். அல்லது அதே அளவில் தங்கம் இறக்குமதி நடைபெற்றாலும், அதன் இறக்குமதிக்கு செலவிடப்படும் வரித் தொகையும் அதன் விலையுடன் சேர்ந்து கொள்ளும். இதனாலும் தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.