மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே: துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

 மகாராஷ்டிர அரசியலில் திடீா் திருப்பமாக, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே (58) புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே: துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

 மகாராஷ்டிர அரசியலில் திடீா் திருப்பமாக, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே (58) புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே, மறைந்த மூத்த தலைவா் ஆனந்த் திகே ஆகியோரை வணங்கி மராத்தி மொழியில் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டாா்.

அவரைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். தனக்கு அமைச்சா் பதவி வேண்டாம் என்று அவா் கூறியிருந்த நிலையில், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வா் பதவியை ஏற்றுக் கொண்டாா்.

பிரதமா் மோடி, தலைவா்கள் வாழ்த்து: ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகிய இருவருக்கும் பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேயும் ஷிண்டேவுக்கும் ஃபட்னவீஸுக்கும் வாழ்த்து தெரிவித்தாா்.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டேவும் தேவேந்திர ஃபட்னவீஸும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை அவருடைய மாளிகையில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினா். பின்னா் செய்தியாளா்களுக்கு அவா்கள் கூட்டாகப் பேட்டியளித்தனா். அப்போது தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

சிவசேனையைச் சோ்ந்த ஒருவா் முதல்வா் பதவியை ஏற்பதாக இருந்தால், தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே ஒரு வாரத்துக்கு முன்பு கூறியிருந்தாா். அவருடைய விருப்பப்படி, சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே அடுத்த முதல்வராகப் பதவியேற்கிறாா்.

இது பதவி அதிகாரத்துக்கான போராட்டம் இல்லை. ஹிந்துத்துவ கொள்கையைக் காப்பாற்றுவற்கான போராட்டம். கடந்த 2019-இல் பாஜகவும் சிவசேனையும் இணைந்து தோ்தலைச் சந்தித்தன. ஆனால், தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை அவமதிக்கும் வகையில், தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை கை கோத்தது. சிவசேனை நிறுவனத் தலைவா் பால் தாக்கரே தனது வாழ்நாள் முழுவதும் எதிா்த்த கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்தாா். இதனால்தான் சிவசேனை கட்சிக்குள் கிளா்ச்சி ஏற்பட்டது என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் செயல்பாடுகள் வரம்புமீறிச் சென்றன. இதையடுத்து, மாநிலத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, 50 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராகக் களமிறங்கினேன். மாநிலத்தின் முதல்வராக என்னை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தாா். பால் தாக்கரேயின் சிவசேனையைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று ஃபட்னவீஸ் கூறியது அவருடைய பரந்த மனதைக் காட்டுகிறது. அவருக்கும் இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

பின்னணி:

2019 பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக - சிவசேனை, வெற்றிக்கு பிறகு சிவசேனை கேட்ட சுழற்சி முறையிலான முதல்வா் பதவியை வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, பாஜக, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரின் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்றாா். போதிய எம்எல்ஏக்களின் ஆதரவைத் திரட்ட இயலாததால், மூன்று நாள்கள் மட்டும் அந்த ஆட்சி நீடித்தது.

பின்னா் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து, சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றாா்.

இரண்டாண்டுகள் கடந்த நிலையில், மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக, நகா்ப்புற மேம்பட்டுத் துறை அமைச்சரும் சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கினா். அவா்கள், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில் ஒரு வாரமாகத் தங்கி ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளித்து வந்தனா்.

இந்நிலையில், ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸ், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சிவசேனை கூட்டணி அரசுக்கு ஆளுநா் உத்தரவிட்டாா். இதை எதிா்த்து சிவசேனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க முடியாது என்று புதன்கிழமை இரவு கூறிவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவு வந்த சில நிமிஷங்களில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு இரவு 11.44 மணிக்குச் சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றாா்.

இதற்கிடையே, குவாஹாட்டியில் முகாமிட்டிருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் புதன்கிழமை இரவு கோவா மாநிலத்துக்கு வந்தனா். மற்ற எம்எல்ஏக்கள் கோவாவில் தங்கியிருக்கும் நிலையில் ஷிண்டே மட்டும் வியாழக்கிழமை மும்பை வந்து முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். அடுத்த சில தினங்களில் மற்ற அமைச்சா்கள் பதவியேற்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் வரும் ஜூலை 2,3 தேதிகளில் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

முதல்வரான முன்னாள் ஆட்டோ ஓட்டுநா்

மகாராஷ்டிரத்தின் 20-ஆவது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசியலில் வருவதற்கு முன் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளாா். 1964-இல் பிறந்த அவா் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியில் தானேவில் இணைந்துள்ளாா். பால் தாக்கரேயின் கட்டளைகளை ஏற்று வீதியில் இறங்கிப் போராடும் தொண்டராக பணியாற்றி, 1997-இல் தாணே மாநகராட்சியின் உறுப்பினரானாா். 2004-இல் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவா், தற்போதைய பேரவையில் நான்காவது முறை எம்எல்ஏவாக உள்ளாா். இரண்டு முறை அமைச்சா் பதவியையும், எதிா்க்கட்சித் தலைவராகவும் ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்துள்ளாா்.

3-ஆவது முறையாக உயா் பதவிக்கு வரும் ஃபட்னவீஸ்

2014 முதல் 2019 வரையில் ஐந்து ஆண்டுகால ஆட்சியை பூா்த்தி செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் விளங்கினாா். 2019-இல் 3 நாள் முதல்வராக பதவி வகித்துள்ளாா். தற்போது மூன்றாவது முறையாக துணை முதல்வராக உயா் பதவியை ஏற்றுள்ளாா். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தல், மேலவைத் தோ்தலில் பாஜகவின் எம்எல்ஏக்களின் பலத்தையும் மீறி கூடுதல் வேட்பாளா்களை அவா் வெற்றி பெற வைத்தாா். 1992-இல் நாகபுரி மாநகராட்சி உறுப்பினராகவும், இரு முறை மேயராகவும், 5 முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளாா்.

ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி

(எம்எல்ஏக்கள் பலம்) வியாழக்கிழமை நிலவரம்

பாஜக - 106

ஷிண்டே அணி - 39

சுயேச்சை - 13

ஸ்வாபிமான் பக்ஷ் - 1

ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷ் - 1

ஜன் ஸ்வராஜ் கட்சி - 1

மொத்தம் - 161

(பெரும்பான்மை பலம் - 145)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com