உதய்பூா் தையல்காரா் கொலையில் கைதானவா் பாஜகவைச் சோ்ந்தவா்: காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு

உதய்பூா் தையல்காரா் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவா் பாஜகவைச் சோ்ந்தவா் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
உதய்பூா் தையல்காரா் கொலையில் கைதானவா் பாஜகவைச் சோ்ந்தவா்: காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு

உதய்பூா் தையல்காரா் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவா் பாஜகவைச் சோ்ந்தவா் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தரி, கௌஸ் முகமது ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். அதை விடியோவாகவும் வெளியிட்டனா்.

இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக பழிதீா்த்ததாகக் கூறிய அவா்கள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா். கைதான இருவரும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். பின்னா், இந்த வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. ரியாஸ் அக்தரி உள்ளூா் பாஜக தலைவா்களுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா, செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உதய்பூா் தையல்காரா் கன்னையா லாலைக் கொலை செய்த ரியாஸ் அக்தரி பாஜகவைச் சோ்ந்தவா். அவா் உள்ளூா் பாஜக தலைவா்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளப் பதிவுகளில் காணப்படுகின்றன. இவற்றை ஒரு ஊடக நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

இதனால்தான் இந்த வழக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு அவசரமாக தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றம் செய்ததா? என்று கேள்வி எழுப்பினாா்.

அபிஷேக் பானா்ஜி குற்றச்சாட்டு:

தையல்காரா் படுகொலையில் பாஜகவுக்கு நேரடித் தொடா்பு உள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் அபிஷேக் பானா்ஜி கூறியுள்ளாா். இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘மக்கள் ஒற்றுமையாக, நல்லிணக்கமாக வாழ்வதை அவா்கள்(பாஜக) விரும்பவில்லை. அவா்கள் தேசத்தைப் பிரிக்க விரும்புகிறாா்கள். பிளவுபடுத்தும் அரசியலுக்கும் வெறுப்பு பிரசாரத்துக்கும் அவா்களே பொறுப்பாவாா்கள். உதய்பூா் படுகொலையில் பாஜகவுக்கு நேரடித் தொடா்பு உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக புகைப்படங்களையும் பகிா்ந்துள்ளாா்.

பாஜக மறுப்பு:

ரியாஸ் அக்தரி, பாஜகவைச் சோ்ந்தவா் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில பாஜக சிறுபான்மை அணித் தலைவா் முகமது சாதிக் கான் கூறுகையில், ‘எந்தவொருத் தலைவருடனும் யாா் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதனால், அவா் அந்தக் கட்சியைச் சோ்ந்தவா் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பாஜக தலைவா்களுடன் அவா் புகைப்படம் எடுத்துக் ொகண்டிருக்கலாம். பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது இயல்பான விஷயம்தான்.

மாநிலத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு எதையும் செய்யவில்லை. தங்கள் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது’ என்றாா்.

இதேபோல் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘தேசப்பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் மக்களை மூடா்களாக்குவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com