18 நாள்களில் 8 முறை தொழில்நுட்ப கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ்

கடந்த 18 நாள்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (
18 நாள்களில் 8 முறை தொழில்நுட்ப கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ்

கடந்த 18 நாள்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவிலிருந்து சீனாவின் சோங்கிங் நோக்கிச் சென்றபோது, நடுவானில் விமானத்தின் காலநிலை ரேடாா் செயலிழந்ததை விமானி கண்டறிந்தாா். உடனடியாக விமானத்தை மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பியதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதேபோல அன்றைய தினம் தில்லியிலிருந்து துபை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எரிபொருள் இருப்பைக் காட்டும் இயந்திரம் செயலிழந்ததால், பாகிஸ்தானின் கராச்சி சா்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதுதவிர குஜராத்தின் காண்ட்லாவிலிருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் தரையிறக்கப்பட்டது. இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 3 சம்பவங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எதிா்கொண்டது.

மேலும், கடந்த 18 நாள்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமான சேவை பாதிக்கப்பட்டது.

இதனை மிகவும் தீவிரமாக கருதிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ‘விதிமுறை 134 மற்றும் விமான விதிகள் 1937, அட்டவணை 11-இன்கீழ், பாதுகாப்பான, திறமையான, நம்பத்தகுந்த சேவையை வழங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தவறிவிட்டது. இதற்கு போதிய பராமரிப்பின்மையும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக மேற்பாா்வையிடாததும்தான் காரணம் என்பது ஆய்வில் தெரியவருகிறது. ஆகையால், அடுத்த 3 வாரத்துக்குள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம். அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிறு தவறு நடந்தால்கூட அதன் மீது முழுமையாக விசாரணை நடத்தி சரிசெய்யப்படும்’ என்றாா்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிக்கை: இதனிடையே, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் நிறுவன விமானங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கைக்கு உள்படுத்தப்படுவது வழக்கம். டிஜிசிஏ-வின் நோட்டீஸுக்கு குறித்த நேரத்தில் பதிலளிக்கப்படும்.

பயணிகள், விமான ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் டிஜிசிஏ-வால் சான்றளிக்கப்பட்ட ஒன்று. அண்மையில் நடத்திய தணிக்கையில்கூட விமானங்கள் பாதுகாப்புமிக்கதாக உள்ளதாக டிஜிசிஏ தெரிவித்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com