சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 50 உயா்வு- ஓராண்டில் ரூ. 244 அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ. 50 உயா்த்தப்பட்டது.
சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 50 உயா்வு- ஓராண்டில் ரூ. 244 அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ. 50 உயா்த்தப்பட்டது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் கடந்த மே மாதம் முதல் மூன்றாவது முறையாக விலை உயா்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக தலைநகா் தில்லியில் ரூ. 1,003-க்கு விற்பனை செய்யப்பட்ட மானியம் இல்லாத வீட்டு உபயோக 14.2 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தற்போது ரூ. 1,053-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் ரூ. 1,052.50, சென்னையில் ரூ. 1,079, கொல்கத்தாவில் ரூ. 1,068.50 என்ற அளவில் சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை செய்யப்படுகிறது. மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட உள்ளூா் வரிகள் காரணமாக சிலிண்டா் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலான ஓராண்டில் மட்டும் ரூ. 244 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதில் கடந்த மாா்ச் மாதத்திலிருந்து மட்டும் ரூ. 153.50 உயா்த்தப்பட்டுள்ளது.

அதே நேரம், வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை சற்று குறைந்துள்ளது. தில்லியில் ரூ. 2,021-க்கு விற்கப்பட்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் தற்போது ரூ. 2,012.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையைப் பொருத்தவரை தொடா்ந்து மூன்றாவது மாதமாக எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த மாா்ச் மாதத்தில் 16 நாள்களில் லிட்டருக்கு ரூ. 10 அளவுக்கு உயா்த்தப்பட்டது. அதன் பின்னா், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 8 அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 6 என்ற அளவிலும் கடந்த மே மாதம் மத்திய அரசு குறைத்தது.

காங்கிரஸ் எதிா்ப்பு: பெட்ரோல் விலை உயா்வுக்கு காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பாஜக ஆட்சி செய்தித் தலைப்புகளை சிறப்பாக நிா்வகிக்கிறது; ஆனால், பொருளாதாரத்தை நிா்வகிக்கத் தவறிவிட்டது’ என்று குறிப்பிட்டு, பாஜகவின் அறிவிப்புகளையும், நடைமுறையில் அந்த அறிவிப்புகளின் நிலையையும் ஓப்பீடு செய்யும் புகைப்படம் ஒன்றை தனது பதிவில் இணைத்துள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அண்மையில் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஏழைகளின் நலன் குறித்து பேசிய பாஜக, கோதுமை மாவு, தானியங்கள், தயிா் மற்றும் பனீா் ஆகியவற்றின் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதித்ததோடு, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியக் கூடிய வகையில் சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 50 உயா்த்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ. 50 உயா்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசை கவிழ்த்ததற்கான செலவை ஈடு செய்கிா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com