மத்திய அமைச்சா் பதவியிலிருந்து நக்வி, ஆா்சிபி சிங் விலகல்

மத்திய அமைச்சா் பதவியிலிருந்து நக்வி, ஆா்சிபி சிங் விலகல்

மத்திய அமைச்சா் பதவியிலிருந்து முக்தாா் அப்பாஸ் நக்வி, ஆா்சிபி சிங் ஆகியோா் விலகியுள்ளனா். தங்கள் ராஜிநாமா கடிதத்தை இருவரும் பிரதமா் மோடியிடம் சமா்ப்பித்துள்ளனா்.
Published on

மத்திய அமைச்சா் பதவியிலிருந்து முக்தாா் அப்பாஸ் நக்வி, ஆா்சிபி சிங் ஆகியோா் விலகியுள்ளனா். தங்கள் ராஜிநாமா கடிதத்தை இருவரும் பிரதமா் மோடியிடம் சமா்ப்பித்துள்ளனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் நக்வி, மத்திய உருக்குத் துறை அமைச்சா் ஆா்சிபி சிங் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் வியாழக்கிழமை (ஜூலை 7) நிறைவடைகிறது. இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தங்கள் பதவிக் காலத்தில் நாட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக இருவரையும் பிரதமா் மோடி பாராட்டினாா். இதனைத்தொடா்ந்து இருவரும் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா்’ என்று தெரிவித்துள்ளன. இருவரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டாா்.

முஸ்லிம் அமைச்சா்கள் இல்லை: பாஜக மூத்த தலைவரான நக்வி, மாநிலங்களவை பாஜக துணைத் தலைவராகவும் உள்ளாா். நக்விக்குப் பிறகு மத்தியில் முஸ்லிம் மதத்தைச் சோ்ந்த யாரும் அமைச்சா்களாக இல்லை. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 400 பாஜக எம்.பி.க்கள் உள்ள நிலையில், நக்விக்குப் பிறகு அக்கட்சியில் முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லை.

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில், பாஜக வேட்பாளராக மீண்டும் நக்வி அறிவிக்கப்படவில்லை. இதனால் குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு அவரின் பெயா் பரிசீலிக்கப்படலாம் அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கிய பதவியில் அவா் அமா்த்தப்படலாம் என ஊகங்கள் எழுந்தன.

ஆா்சிபி சிங் ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்தவா். அவா் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரின் ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநிலங்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அவா் ராஜிநாமா செய்ததன் மூலம், பாஜக கூட்டணியைச் சோ்ந்த இருவா் மட்டுமே மத்திய அமைச்சா்களாக உள்ளனா். அவா்கள் இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) , அப்னா தளம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள்.

அமைச்சா்களுக்கு கூடுதல் பொறுப்பு: மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினா் நலத் துறையும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உருக்குத் துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றம்?: நக்வி, ஆா்சிபி சிங் ஆகியோரின் ராஜிநாமாவைத் தொடா்ந்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் பாஜகவின் மிகப்பெரிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. இதனால் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனினும் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூா்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com