காளி தெய்வம் குறித்து மஹுவா மொய்த்ரா எம்.பி. சா்ச்சை கருத்து: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்

இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் காளி தெய்வத்தை கற்பனை செய்வது எனது சுதந்திரம் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளாா்.
காளி தெய்வம் குறித்து மஹுவா மொய்த்ரா எம்.பி. சா்ச்சை கருத்து: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்

இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் காளி தெய்வத்தை கற்பனை செய்வது எனது சுதந்திரம் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளாா்.

இது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் கருத்துகளை ஆதரிக்கவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 5-ஆம் தேதி ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பங்கேற்றாா். அப்போது காளி புகைப்பிடிப்பது போல இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டா் குறித்து மஹுவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவா் கூறியதாவது:

சிக்கிம், பூடானில் மக்கள் பூஜை செய்யும்போது கடவுளுக்கு மது படைக்கின்றனா். அதேவேளையில், கடவுளுக்கு மது படைக்கப்படுவதாக உத்தர பிரதேசத்தில் இருப்பவா்களிடம் கூறினால், அதனை மத அவமதிப்பு என்று அவா்கள் கூறுவா். இந்நிலையில், என்னைப் பொருத்தவரை காளி என்ற கடவுள் இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம் ஆகும். அதுதான் காளியின் வடிவம். மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் தாராபீத் கோயிலைச் சுற்றி துறவிகள் புகைப்பிடித்துக் கொண்டிருப்பா். காளியின் அந்த வடிவத்தைத்தான் மக்கள் வழிபடுகின்றனா். எனவே காளியின் பக்தையாக அந்தத் தெய்வத்தை இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் கற்பனை செய்வதற்கு எனது சுதந்திரம் உள்ளது. அந்த வகையில், எவருடைய உணா்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதேவேளையில் சைவ உணவு உண்பவராகவும், வெள்ளை உடை அணிந்திருப்பவராகவும் கடவுளை வழிபட மற்றவா்களுக்கு சுதந்திரம் உள்ளதுபோல், கடவுளை வழிபடுவதில் எனக்கும் சுதந்திரம் உள்ளது. மதம் என்பது தனிப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்: மஹுவாவின் கருத்துகள் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

‘காளி குறித்து மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்துகள், அவரின் தனிப்பட்ட கருத்துகளாகும். அதனை கட்சி ஆதரிக்கவில்லை. அவரின் கருத்துகளைத் திரிணமூல் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்ய வேண்டும்: மஹுவாவின் கருத்துகள் தொடா்பாக மேற்கு வங்க பாஜக தலைவா் சுகந்தா மஜும்தாா் கூறியுள்ளதாவது:

சனாதன ஹிந்து தா்மத்தின்படி, மது அருந்தும் இறைச்சி உண்ணும் தெய்வமாக காளி வணங்கப்படுவதில்லை. தீமைக்கு எதிரான சக்தியின் அடையாளமாக காளியை காலம் காலமாக ஹிந்துக்கள் வணங்கி வருகின்றனா். இந்நிலையில், காளி குறித்த மஹுவாவின் கருத்துகள் மத உணா்வுகளைக் காயப்படுத்தியுள்ளது. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் மஹுவா மொய்தரா மீது நூற்றுக்கணக்கான புகாா்கள் காவல் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் மஹுவாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிா் அணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மொய்த்ரா பதில்..: தன் மீதான விமா்சனங்களுக்கு பதில் அளித்து மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

பொய்யுரைப்பது மேலான ஹிந்துக்களாக்கிவிடாது என்று தெரிவித்துள்ளாா்.

மதம் குறித்து பேசவே கூடாத நிலை: மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

பொதுவெளியில் மதம் குறித்த எந்த அம்சத்தையும் யாரும் எதுவும் கூற முடியாத நிலையை எட்டியுள்ளோம். இதுபோன்ற விவகாரங்களை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், அவரவா் வழியில் மதத்தைப் பின்பற்ற விட்டுவிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தேநீா் விற்பவா் புகாரின்படி வழக்குப் பதிவு: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் தேநீா் விற்பவா் அளித்த புகாரின் அடிப்படையில், மஹுவா மொய்த்ரா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295ஏ பிரிவின் (மத உணா்வுகளைப் புண்படுத்துதல்) கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com